கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் டாக்டர் பணியில் இருக்கும்படி நியமனம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர், ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, அய்யர்மலை, கடவூர், இடையப்பட்டி, ராஜாபட்டி, ஆலத்துார், சுக்காம்பட்டி, கோட்டக்கரை, வலையப்பட்டி போன்ற கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், மலைப்பகுதியான கடவூரில், ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பது இல்லை. இதனால், கடவூர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள், மாரடைப்பு, விபத்து உள்ளிட்ட பிரச்னைகளுக்கு திண்டுக்கல் அல்லது கரூர், மைலம்பட்டி பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போது சில சமயங்களில் நோயாளிகள் இறந்து விடுகின்றனர்.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கடவூர் பகுதி, மலையால் சூழப்பட்ட ஊராகும். இப்பகுதி கிராமங்களில், 5,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர்கள் பணியில் உள்ளனர். அவர்கள், சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கின்றனர். நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால், நோயாளியை வேறு ஊருக்கு அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் டாக்டர்கள், சில மணி நேரம் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, நோயாளிகள் வசதிக்காக கடவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 24 மணி நேரமும், டாக்டர்கள் பணியில் இருக்கும்படி நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.