திம்பம் மலைப்பாதையில்
கவிழ்ந்த 'பிக்-அப்' வேன்
சத்தியமங்கலம், மே 24-
திம்பம் மலைப்பாதையில் பிக்-அப் வேன் கவிழ்ந்ததில், மூன்று பேர் காயங்களுடன் தப்பினர்.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவைக்கு, கிரைண்டர் கல் ஏற்றிய பிக்-அப்வேன், திம்பம் மலைப்பாதை வழியாக நேற்று மாலை வந்தது. ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகில் வந்தபோது நிலை தடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதனால் கிரைண்டர் கற்கள் சாலையில் சிதறின. டிரைவர் சுந்தரமகாலிங்கம் அவருடன் வந்த இருவர் என மூவரும், லேசான காயத்துடன் தப்பினர்.
'கசாப்பு' கடைக்காரர்
மயங்கி விழுந்து மரணம்
சென்னிமலை, மே 24-
வெள்ளோடு அருகே கறிக்கடையில், ஆட்டுத்தோலை உரித்துக் கொண்டிருந்த கடைக்காரர், மயங்கி விழுந்து பலியானார்.
வெள்ளோட்டை அடுத்த முகாசி அனுமன்பள்ளியை சேர்ந்தவர் சந்திரசேகரன், 62; வீட்டு முன்புறம் கறிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் காலை கறிக்கடையில் ஆட்டு தோலை உரித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழந்தார். அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே இறந்து விட்டார். இதுகுறித்து வெள்ளோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
புதரில் சேவல் சூதாட்டம்
ஒருவர் சிக்கினார்
சென்னிமலை, மே 24 -
அரச்சலுார் போலீசார் பழையபாளையம் கதிவேரிகாடு பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனர். புதர் மறைவில் ஒரு கும்பல், சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது. போலீசாரை பார்த்ததும் கும்பலில் இருந்த நான்கு பேரும் ஓடினர். போலீசார் விரட்டியதில் ஒருவர் சிக்கினார். விசாரணையில் முருங்கத்தொழுவு, பழையபாளையத்தை சேர்ந்த சரவணன், 27, என்பது தெரிந்தது. தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.
கொரோனா சிகிச்சையில் ௪ பேர்
ஈரோடு, மே 24-
ஈரோடு மாவட்டத்தில் இரு மாதங்களாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து ஓரிருவருக்கு மட்டும் இருந்தது. கடந்த, 5ல் யாருக்கும் கொரோனா இல்லை என்ற நிலை ஏற்பட்டது. கடந்த, 17 ல் மீண்டும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அடுத்தடுத்து ஒரு நாள் இடைவெளியில் ஒவ்வொருவருக்காக கொரோனா
ஏற்பட்டது. தற்போது நான்கு பேர் சிகிச்சையில் உள்ளனர்.
குறைதீர் கூட்டத்தில்
224 மனுக்கள் ஏற்பு
ஈரோடு, மே 24-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திரா தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 224 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறையின் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மனுக்கள் மீது துறை ரீதியாக விரைவான நடவடிக்கை மேற்கொள்ள, டி.ஆர்.ஓ., உத்தரவிட்டார்.
போலீஸ்காரர் 'சஸ்பெண்ட்'
ஈரோடு, மே 24-
அந்தியூர் போலீஸ் ஸ்டேஷனில் போலீசாக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். ஊட்டி மலர் கண்காட்சி பாதுகாப்பு பணிக்கு சென்றார். அங்கு சக போலீசாருடன், அவர் செயல்பட்ட விதம் குறித்து, வீடியோ எடுத்து ஆதாரங்களை அனுப்பினர். இதுகுறித்து உயர் போலீசார் அதிகாரிகள் விசாரணை நடத்தி, கார்த்திகேயனின் தவறான நடவடிக்கை குறித்து அறிக்கை அளித்தனர். இதன் அடிப்படையில் கார்த்திகேயனை, தற்காலிக பணிநீக்கம் செய்து, எஸ்.பி., சசிமோகன் நேற்றிரவு உத்தரவிட்டார்.
பெருந்துறையில் ௨ வீடுகளில் திருட்டு
பெருந்துறை, மே 24-
பெருந்துறை, குன்னத்துார் ரோடு, கூட்டுறவு நகரில் குடியிருப்பவர் தினேஷ்குமார், 33; சில நாட்களுக்கு முன் வெளியூர் சென்றவர் நேற்று காலை வீடு திரும்பினார். வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, மூன்று பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிந்தது.
இதேபோல் பெருந்துறை, குன்னத்துார் ரோடு, சக்தி நகரை சேர்ந்தவர் உமா, 50; சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றவர், நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். முன் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் இருந்த, நான்கு பவுன் நகை திருட்டு போனதும் தெரிந்து, அதிர்ச்சி அடைந்தார். இரு சம்பவம் குறித்தும், பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
விவசாயி விபரீத முடிவு
பர்கூர்மலையில், விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
பர்கூர்மலை, தேவர் மலையை சேர்ந்தவர் நாகன், 32; சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை வீட்டை விட்டு சென்றவர், நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் வீட்டின் அருகே பயன்படுத்தப்படாமல் இருந்த ஒரு வீட்டில், நாகன் நேற்று காலை துாங்கில் தொங்கினார். இதைப்பார்த்த மனைவி சுதாமணி அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.