சென்னசமுத்திரம் அருகே, சுடுகாட்டில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, வருந்தியாபாளையம் மக்கள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கொடுமுடி தாலுகா சென்னசமுத்திரம் அருகே வருந்தியாபாளையம் கிராம மக்கள், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது: சென்னசமுத்திரம் டவுன் பஞ்., வார்டு எண்-2ல், வருந்தியாபாளையம் உள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்தில் 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உள்ளனர்.
இவ்விடத்தை சுற்றி வருந்தியாபாளையம், வருந்தியாபாளையம் புதுார், ரோட்டூர், ராமநாதபுரம், முனியன்ன சுவாமி கோவில் பகுதி உள்ளது. இக்கோவில் பகுதி வழியாக, இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்வார்கள். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். குடிநீராதாரம், விளை நிலங்கள் பாதிக்கும். அங்கு, 150 ஏக்கரில் மஞ்சள், கரும்பு, நெல், வாழை போன்ற பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர். இவை அனைத்தும் நஞ்சாகும். எனவே வருந்தியாபாளையம் சுடுகாட்டில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.