ஈரோடு அருகே மாமரத்துப்பாளையம், மொடக்குறிச்சி அண்ணா நகர், புதுக்காலனி பகுதிவாசிகள், குடிநீர் கேட்டு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டனர்.
மொடக்குறிச்சி டவுன் பஞ்., அண்ணா நகர், புதுக்காலனி பகுதி மக்கள், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம், நேற்று மனு வழங்கி கூறியதாவது: இப்பகுதியில், 75க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். எங்களுக்கு அரசு மூலம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. எங்கள் பகுதியினர் குடிக்க, துணிகள் துவைக்கவும், பிற பயன்பாட்டுக்குதண்ணீர் கிடைப்பதில்லை. தனியாக குடிநீர் வழங்குவதற்கான வாய்ப்பை அமைத்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.
இதேபோல் ஈரோடு மாநகராட்சி, மாமரத்துப்பாளையம், ஆண்டிக்காடு பகுதியினர் மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதிக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.
மூன்று மாதங்களாக, இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒரு முறை கூட தண்ணீர் வழங்குவதில்லை. இதனால் ஒரு வீட்டுக்கு இரண்டு - மூன்று நாட்களுக்கு, 300 ரூபாய்க்கு மேல் செலவிட்டு, லாரியில் குடிநீர் வாங்கும் நிலையில் உள்ளோம். தடையின்றி தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.