கொம்பாடிப்பட்டியில்
மாரியம்மன் கோவில் விழா
கிருஷ்ணராயபுரம், மே 24-
கொம்பாடிப்பட்டி கிராமத்தில், மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கொம்பாடிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை, அம்மனுக்கு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
பின், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மாவிளக்கு பூஜை மற்றும் வழிபாடு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கம்மநல்லுார் கிராமத்தில்
வாய்க்கால் துார்வாரும் பணி
கிருஷ்ணராயபுரம், மே 24-
கம்மநல்லுார் கிராமத்தில் உள்ள சிறிய பாசன வாய்க்காலை துார்வாரும் பணி, நேற்று நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கம்மநல்லுார் நெடுஞ்சாலை அருகிலிருந்து மகாதானபுரம் வரை சிறிய பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் நாணல் செடிகள் அதிகளவில் வளர்ந்திருந்ததால், தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது.
தற்போது, பொதுப்பணித்துறை நிர்வாகம் சார்பில் பொக்லைன் இயந்திரம் மூலம், வாய்க்காலை துார்வாரும் பணி நடந்தது. இப்பணிகளை பொதுப்பணித்துறை அலுவலர்கள் பார்வையிட்டனர்.
அமராவதி ஆற்றில் கழிவுநீர் கலப்பு
கரூர், மே 24---
கரூர் நகராட்சி பகுதி வழியாக அமராவதி அணை செல்கிறது. நேற்று பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், கரூர் எல்லையை அடைய சில நாட்கள் ஆகும். பெரும்பாலும், வெள்ளம் பெருக்கெடுத்து வந்தால் மட்டுமே, கரூர் மாவட்டம் முழுவதும் பாய்ந்து இறுதியில் திருமுக்கூடலுாரில் கலக்கிறது. தற்போது தண்ணீர் இல்லை. அவ்வப்போது பெய்யும் மழை நீரும், அருகேவுள்ள வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் மட்டும் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இந்த கழிவுநீரில் குப்பையும், பிளாஸ்டிக் கழிவுகளும் அதிகளவில் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், மக்கள் கொசுக்கடியால் துாங்க முடியாமல் தவிக்கின்றனர். கழிவுநீர் மற்றும் சாயக்கழிவுநீர் கலக்காமல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டப்பணிகள் ஆணைக்குழு
சார்பில் விழிப்புணர்வு நாடகம்
கரூர், மே 24-
கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், விழிப்புணர்வு நாடகம் கரூர் பஸ் ஸ்டாண்டில் நடந்தது. மாவட்ட தலைமை நீதிபதி சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார். அதில், பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் குறித்து, கரூர் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் நாடகம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, நீதிபதிகள் ராஜலிங்கம், கோகுல் முருகன், சைல்டு லைன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபராஜ், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் உள்பட பலர் உடனிருந்தனர்.
இளம்பெண் மாயம்
குளித்தலை, மே 24-
குளித்தலை அடுத்த, தேவர்மலை பஞ்., பகுதியை சேர்ந்த பெண் கூலித்தொழிலாளியின், 18 வயது மகள். இவர், நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வீட்டில் துாங்க சென்றார். அதிகாலையில் இளம்பெண்ணின் தாய் எழுந்து பார்த்தபோது, மகளை காணாததால் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, பெண்ணின் தாய் கொடுத்த புகார்படி, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, தேடிவருகின்றனர்.