''சிலருக்கு புரிதலும் இல்லை; புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை,'' என, அண்ணாமலை குறித்த கேள்விக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்தார்.
கரூர் அருகே, மின்னாம்பள்ளியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை, காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில், 75 பஞ்சாயத்தில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இங்கு, 7.88 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொய் பேசுபவர்கள் எந்த பொய்யையும் அதிகமாக பேசலாம். பெட்ரோல், டீசல் விலையில் மத்திய, மாநில அரசுகளுக்கு சேர்ந்து வரக்கூடிய வருவாயில் பெறக்கூடிய வரியை மட்டும் குறைத்து விட்டு, நேரடியாக மத்திய அரசுக்கு வரக்கூடிய வருவாயில் எந்த வரியையும் குறைக்கவில்லை. அதை மறைத்து, மறந்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார்.
சிலருக்கு புரிதலும் இல்லை; புரிந்து கொள்ளும் பக்குவமும் இல்லை. கடந்த ஆட்சியில் விவசாயிகளின் நண்பன், குடிமராமத்து நாயகன் என்று பேசி வந்தனர். 5 லட்சம் விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக பதிவுசெய்து காத்திருந்தனர். ஆனால், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற ஓராண்டில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
கலெக்டர் பிரபுசங்கர், வேளாண் இணை இயக்குனர் சிவசுப்பிரமணியன், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் இளஞ்செல்வி, மகளிர் திட்ட அலுவலர் வாணிஈஸ்வரி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மணிமேகலை உட்பட பலர் பங்கேற்றனர்.