குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து, முன்கூட்டியே இன்று தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 65 ஆண்டுகளுக்கு பின் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த, 20 நாட்களில், 11 அடி அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 117.28 அடியாகவும், நீர் இருப்பு, 89.19 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 12 ஆயிரத்து, 777 கனஅடி தண்ணீர் வந்தது. குடிநீருக்காக வினாடிக்கு, 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பு மாதம், வழக்கத்துக்கு மாறாக, மேட்டூர் அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருப்பதாலும், தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் ஜூன், 12க்கு முன்னதாக, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என, டெல்டா பாசன விவசாயிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, குறுவை சாகுபடிக்காக, மேட்டூர் அணையிலிருந்து, தண்ணீர் இன்று திறக்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் கடந்த, 22ல் அறிவித்தார். இதனால், நான்கு லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், குறுவை சாகுபடி இருக்கும் என, டெல்டா மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு குறித்து, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மேட்டூர் அணை ஜூன், 12க்கு பதிலாக, 20 நாட்களுக்கு முன்பாக நாளை (இன்று) திறக்கப்படுகிறது. இதனால், டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா மற்றும் தாளடி போன்ற முப்போக சாகுபடி நடப்பாண்டில் சிறப்பாக இருக்கும். மேட்டூர் அணை கட்டப்பட்டு, 88 ஆண்டுகளில் ஜூன், 12க்கு முன்பாக, 10 முறையும், குறித்த காலத்தில், 18 முறையும், காலதாமதமாக, 60 முறையும் டெல்டாவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை வரலாற்றில், 1942ம் ஆண்டு முதல், 1945ம் ஆண்டு வரை தொடர்ந்து, மே மாதத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
அதன்பின், 77 ஆண்டுகளுக்கு பின், 5வது முறையாக மே மாதத்தில், இன்று மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது' என்றனர்.
காவிரிபாசன விவசாயிகள் சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியதாவது:
மேட்டூர் அணைக்கு கூடுதல் தண்ணீர் வரும் பட்சத்தில், இரண்டு நாட்களில் நிரம்பி விடும். மே மாதம், 24ல் தண்ணீர் திறப்பது இதுவே முதல் முறையாகும். அணை பாதுகாப்புக்காக, முன்கூட்டியே திறப்பது பாராட்டுக்குரியது. இந்த தண்ணீரை பயன்படுத்தி, ஏரி, குளங்களை நிரப்பி கொள்ள வேண்டும். வரும் ஜூன், 12க்கு பின் வரும் தண்ணீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.