தனிநபர் ஆக்கிரமித்த கோவில் நிலத்தை மீட்டு, திருவிழா நடத்த அனுமதி வழங்க வேண்டும் என, பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில், பா.ஜ., மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில், அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட ஓமந்துார் கிராமத்தில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா, அரசுக்கு சொந்தமான இடத்திலிருந்து, கரகம் பாலித்து காலங்காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது, இந்த இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து, திருவிழாவை நடத்த விடாமல் தடுத்து வருகிறார். இது குறித்து, 2002ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில், ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஆனால், 2017க்குப்பின், அந்த இடம் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்து கேட்ட பொதுமக்கள் மீது, பொய்யான வழக்கு போடுவது; போலீஸ் மூலம் தொந்தரவு கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, வரும், 29ல் மேற்படி கிராமத்தில் திருவிழா நடத்த பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.