'கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம்' நேற்று, காணொலி வாயிலாக, முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தொடங்கிவைத்தார். அது, சேலம், அயோத்தியாப்பட்டணத்தில் உள்ள திருமண மண்டபத்தில், ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அதில், கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு, உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை சார்பில், 10 பயனாளிகளுக்கு, 9,770 ரூபாய் மதிப்பில், மானியத்துடன் கூடிய இடுபொருள், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், 3 மகளிர் குழுவுக்கு, 3.5 லட்ச ரூபாய் கடனுதவிகள் வழங்கினார். அப்போது, அவர் பேசுகையில், 'மாவட்டத்தில், 86 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன்மூலம், தென்னங்கன்று, பயிறுவகை விதைகள் வழங்குதல், தெளிப்பான், காய்கறிதொகுப்பு, ஆதிதிராவிடர்களுக்கு, 100 சதவீத மானியத்தில், கிணறு அமைத்து, மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசனம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன' என்றார்.