சென்னை : 'தாம்பரம் மாநகராட்சியில் உள்ள ஏரிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற, தலைமை செயலர் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.
டெண்டர்
இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, தாம்பரம் மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கை:தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பிறகு, திருநீர்மலை பகுதியில், திடக்கழிவுகளை பயோ-மைனிங் முறையில் அகற்ற, டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.வெள்ளம் ஏற்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. 2070 கன மீட்டர் திடக்கழிவுகளில், 900 கன மீட்டர் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
மீதமுள்ள கழிவுகள், ஜூன் 30-ம் தேதிக்குள் அகற்றப்படும்.திருநீர்மலை பகுதியில் உள்ள வீடுகளில் உருவாகும் 10ஆயிரத்து 500 கிலோ திடக்கழிவுகளில், 4,500 கிலோ கழிவுகள் உரமாக்கப்பட்டு, வீடுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.மக்காத கழிவுகள் சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன.
மீண்டும் பயன்படுத்தக்கூடிய கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு, தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.தாம்பரம் மாநகராட்சியில் வீடு, வீடாகச் சென்று திடக்கழிவுகள் 100 சதவீதம் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல், நீதித்துறை உறுப்பினர்கள் கே.ராமகிருஷ்ணன், சுதிர் அகர்வால், நிபணர் குழு உறுப்பினர்கள் சத்யகோபால், செந்தில்வேல் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பிறப்பித்த உத்தரவு:திடக்கழிவு மேலாண்மைக்காக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்களை, தாம்பரம் மாநகராட்சி தெரிவித்துள்ளது.
ஆனாலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் மீறப்படுவது தொடர்கிறது.குடிமக்களுக்கு, தூய்மையான சுற்றுச்சூழலை வழங்க வேண்டியது, அரசின் கடமை. ஆக்கிரமிப்புகளால், 150 ஏக்கர் பரப்பளவில் இருந்த திருநீர்மலை ஏரி, 104 ஏக்கராக சுருங்கியுள்ளதாக, கூட்டுக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, எந்த தகவலும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது. பொது சுகாதார நலன் கருதி, சம்பந்தப்பட்ட துறைகளின் செயலர்களுடன், தலைமைச் செயலர் ஆலோசனை நடத்தி, இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமை தவறிய அதிகாரிகள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதை, தலைமை செயலர் உறுதி செய்யலாம்.
செம்பாக்கம் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க வேண்டும். நீரின் தரத்தையும் பாதுகாக்க வேண்டும். பொது சுகாதார நலன் கருதி, செங்கல்பட்டு கலெக்டரும், தலைமை செயலரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.