குன்றத்துார் : குன்றத்துார் -- குமணன்சாவடி சாலையில், அடிக்கடி மின் வடம் அறுந்து விழுவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் சூழல் நிலவுகிறது.
குன்றத்துார்-- - குமணன்சாவடி சாலையில், பிரபல தனியார் நகைக்கடை எதிரே, மின் வடம் செல்கிறது. அதை ஒட்டி, மரங்கள் செல்கின்றன. அந்த மரங்கள் அடிக்கடி உடைந்து விழுவதும், அதன் காரணமாக, மின் வடம் அறுந்து, சாலையில் விழுவதும் தொடர்கதையாக உள்ளது. நேற்று முன்தினம், இரண்டு முறை மின் வடம் அறுந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்போ, பெரும் காயமோ யாருக்கும் ஏற்படவில்லை. எனினும், இதே நிலை தொடர்ந்தால், பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இது குறித்து, மின்வாரியம் மற்றும் குன்றத்துார் நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என, பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.எனவே, இப்பிரச்னையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு, மின் வடங்கள் அறுந்து விழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.