ராமநாதபுரம்,:ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி, நயினார்கோயில், கமுதி, சத்திரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் விளைச்சல் பகுதிகளில் உலா வரும் மான்கள், காட்டுமாடுகளால் பயிர்கள் சேதமடைகிறது. அதற்குரிய இழப்பீடு வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி, பரமக்குடி தெளிச்சாத்தநல்லுார், சாயல்குடி, ஏர்வாடி, கீழக்கரை, தொண்டி, மண்டபம், உச்சிபுளி உள்ளிட்ட பகுதிகளில் நெல், பருத்தி, காய்கறிகள் உள்ளிட்டவைகளை மானாவாரியாகவும், குளத்துபாசனத்தில் சாகுபடி செய்துள்ளனர். இவற்றை காட்டுமாடுகள் சேதப்படுத்தி வருகின்றன. தற்போது மேற்கண்ட இடங்களில் கருவேல மரக்காடுகள் பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் சுற்றித்திரிகின்றன. இவை வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். காட்டு மாடுகளால் பயிர் சேதமடைந்து ரூ.பலஆயிரம் இழப்பு ஏற்படுகிறது. தற்போது மான்களும் பயிர்களை சேதப்படுகிறது. இதற்குரிய இழப்பீடு கேட்டால் வனத்துறை, வருவாய் துறையினர் அலைக் கழிக்கின்றனர் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.வனத்துறையினர் கூறுகையில், புள்ளிமான்கள் சிலர் வயல்வெளியில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாக கூறுகின்றனர். அம்மாதிரியான இடங்களில் வாட்சர்கள் மூலம் மான்களை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்டுகிறோம். மாவட்டத்தில் இதுவரை வனவிலங்குகள் பயிர் சேதத்திற்கு இழப்பீடு வழங்கவில்லை. விவசாயிகள் கோரிக்கை பரிசீலனையில் உள்ளது,' என்றனர்.