கோவை:ஆவாரம்பாளையம் அருள்மிகு ஸ்ரீ சீர்காழி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.ஆவாரம்பாளையம், இளங்கோ நகரில் உள்ளது, சீர்காழி மாரியம்மன், சித்தி விநாயகர், பாலமுருகன், நவகிரகம், கருப்பசாமி மற்றும் கன்னிமார் கோவில். இங்கு, கடந்த 13ம் தேதி, அஷ்டபலி பிரதிஷ்டை செய்யப்பட்டு, 17ம் தேதி கொடியேற்றத்துடன் வைகாசித்திருவிழா மற்றும் திருக்கல்யாண மஹோற்சவம் துவங்கியது. தினசரி அலங்கார பூஜை நடந்தது. நேற்று மாலை ஐந்து மணிக்கு, 250க்கும் மேற்பட்ட ஊர் பொது மக்கள், முத்தாரம்மன் மளிகை கடை மைதானத்தில் இருந்து சீர் கொண்டு சென்றனர். பின்னர், மாலை, 6.30 மணிக்கு, அம்மன் அழைப்பு நிகழ்வு நடந்தது. அதை தொடர்ந்து, 7.30 மணிக்கு, மாரியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். இன்று, திருக்கரக ஊர்வலம், பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளன.