செங்கல்பட்டு:மதுராந்தகம் ஒன்றியம், புக்கத்துரை ஊராட்சி, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முத்து, 55; கூலித்தொழிலாளி. இவருடைய மகளுக்கு திருமணம் நடக்க உள்ளது. உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக, 'டி.வி.எஸ்., எக்ஸ்.எல்.,' இருசக்கர வாகனத்தில், நேற்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.
கருணாகரச்சேரி ஊராட்சி நெல்லி - கூட்டுச்சாலையோரம் வாகனத்தை நிறுத்தி, திருமண பத்திரிகையை பார்த்துக் கொண்டிருந்தார்.அப்போது, உத்திரமேரூர் - புக்கத்துரை தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக வந்த, தாம்பரம் தாசில்தாரின் 'பொலீரோ' நான்கு சக்கர வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த முத்துவின் வாகனத்தின் மீது மோதியது.அரசு வாகனத்தில் ஓட்டுனர் மட்டுமே வந்துள்ளார். விபத்து ஏற்படவும், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த விபத்தில், முத்துவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவ்வழியே சென்ற பொதுமக்கள், முத்துவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.