கோவை:மாநகராட்சி சார்பில், ரூ.1.90 கோடி மதிப்பீட்டில், மேலும் இரு இடங்களில், வீடற்ற மற்றும் ஆதரவற்றோருக்கு விடுதி அமைக்கப்படுகிறது.கோவையில் வீடற்ற நிலையில், சாலையோரம் வசிப்போருக்காக, ஆர்.எஸ்.புரத்தில் இரண்டு, கெம்பட்டி காலனி, கே.என்.ஜி.,புதுார் பூசாரிபாளையம் ஆகிய இடங்களில், மாநகராட்சி சார்பில், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக, வீடற்றோருக்கு விடுதிகள் நடத்தப்படுகின்றன.
இன்னும் பலர் சாலையோரங்களில் தங்கியிருப்பதால், கூடுதலாக இரு இடங்களில், விடுதி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தில், பழைய போஸ்ட் ஆபீஸ் ரோடு, கடலைக்கார சந்தில், ஜி.டி., பள்ளி அருகில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளம் என, 6,550 சதுரடியில் ரூ.1.40 கோடியில், 130 நபர்கள் தங்கும் வகையில் விடுதி அமைக்க திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.இதேபோல், மாநகராட்சி பொது நிதியில், 66வது வார்டு புலியகுளத்தில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தை, ரூ.50 லட்சம் செலவில் சீரமைத்து, வீடற்றோர் தங்கும் விடுதியாக மாற்றவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.