சென்னை:'வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே உள்ள செயல்படும் தனியார் மருந்து தயாரிப்பு ஆலை, விரிவாக்க பணிகளை மேற்கொள்ளக்கூடாது' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அருகே 'சன் பார்மா' என்ற தனியார் மருந்து தயாரிப்பு ஆலை உள்ளது.இதன் விரிவாக்க பணிகளுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து, மீனவர் நலச் சங்கத்தை சேர்ந்த தியாகராஜன் என்பவர், பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், கூறப்பட்டதாவது:தவறான தகவலை அளித்து, இந்நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுள்ளது. சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் ஏதேனும் கட்டமைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றால், தேசிய வன உயிர் வாரியத்தின் அனுமதி அவசியம் என விதிகள் உள்ளன.ஆனால், 'சன் பார்மா' நிறுவனம் இதுவரை வன உயிர் வாரியத்தின் அனுமதி பெறவில்லை. எனவே, சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.இந்த வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த பசுமை தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர், 'சன் பார்மா நிறுவனம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும், பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
'இந்த வழக்கு அடுத்து விசாரணைக்கு வரும் வரை, நிறுவன விரிவாக்கத்திற்காக எந்தப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது' என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை, ஜூலை 12-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.