மறைமலை நகர்:மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், போலீசாரின் மூன்றாவது கண் என அழைக்கப்படும் 'சிசிடிவி' கேமராக்கள் பழுதடைந்த நிலையிலும், பல இடங்களில் கேமராக்கள் இல்லாமலும் உள்ளன.
கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் குற்றவாளிகளை பிடிக்க, போலீசாருக்கு, 'சிசிடிவி' கேமரா பேருதவியாக உள்ளது.ஆனால், மறைமலை நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில், காட்டாங்கொளத்துார், மெல்ரோசாபுரம், செட்டிபுண்ணியம் ஆகிய பகுதி களில் போதிய அளவு 'சிசிடிவி' கேமராக்கள் இல்லை.
அதேபோல், மறைமலை நகர் பிரதான சாலைகளான முக்கிய சந்திப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சிக்னல் பகுதி ஆகிய இடங்களில் பொருத்தப்பட்டுள்ள 'சிசிடிவி' கேமராக்கள் பழுதடைந்து, வேலை செய்யவில்லை.நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வரும் மறைமலை நகர் பகுதியில், 'சிசிடிவி' கேமராக்களை சரி செய்ய வேண்டும். இல்லாத இடங்களில் புதிய கேமராக்களை வைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.