அருப்புக்கோட்டை, :நான்கு வழி சாலைகளின் ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள் பராமரிப்பு செய்யாமல் விட்டதால் புதர்மண்டி உள்ளது. இதனால் ரோட்டில் மழைநீர் தேங்கி ரோடு சேதமடைகிறது.தரைவழி போக்குவரத்தில் பெரிய மாற்றம் கொண்டு வரவும், வணிகம், பயண வசதிகள் மேம்பாட்டில் முன்னேறவும் நாடு முழுவதும் 1998ல் நான்குவழி சாலைகள் அமைக்கப்பட்டது. இந்த ரோடுகளின் ஓரங்களில் மழைநீர் செல்லும் வகையில் வடிகால்கள் கட்டப்பட்டு கனமழையின் போது, அதன் வழியாக நீர் நிலைகளுக்கு மழைநீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது. இதனால் மழை நீரும் வீணாகாது. ரோடும் சேதமாகாது.ஆனால் பல ஆண்டுகளாக இந்த வடிகால்களை பராமரிப்பு செய்யாமல் விட்டதால், தற்போது இவற்றின் மேல் மூடப்பட்டுள்ள கான்கிரீட் சிலாபுகள் சேதமடைந்தும், கோரைப்புற்களால் புதர்மண்டியும், கழிவுநீர் தேங்கியும், குப்பைகள் சூழ்ந்தும் காணப்படுகிறது.மேலும் வடிகால்களில் இறந்த விலங்குகளின் உடல்களை வீசுவது, மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்களை எறிவது போன்ற செயல்பாடுகள் நடப்பதால் கழிவுகள் நிறைந்து மழைநீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற வழியின்றி ரோட்டிலேயே தேங்குவதால் ரோடு சேதமாகிறது. சுகாதார கேடும் ஏற்படுகிறது.அருப்புக்கோட்டையில் காந்திநகர், பாலையம்பட்டி, ரயில்வே மேம்பாலம் பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்கள், ஓடைகள் பராமரிப்பின்றி, மழைநீர் செல்ல முடியாத அளவுக்கு சேதமாகி கிடக்கிறது.தேசிய நெடுஞ்சாலை துறையினர் இதில் கவனம் எடுத்து வடிகால்கள், ஓடைகளை பராமரிப்பு செய்து, மழை நீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.