விருத்தாசலம்:விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் பதவிக்கு நடக்கும் மறைமுக தேர்தலில் தி.மு.க., சார்பில் இருவர் போட்டியிடும் நிலையில், வெற்றி பெற்று சேர்மன் பதவியில் அமரபோவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதன்படி, ஆர்.டி.ஓ., ராம்குமார் தலைமையில் கடந்த மார்ச் 5ம் தேதி, விருத்தாசலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் சேர்மன் மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது.இதில், 16 கவுன்சிலர்கள் சேர்மன் செல்லதுரைக்கு எதிராக ஓட்டளித்தனர். இதனால் அவரது சேர்மன் பதவி பறிபோனது .இந்நிலையில், இன்று காலை 10:00 மணியளவில், ஒன்றிய அலுவலக வளாகத்தில் சேர்மன் பதவிக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது.
இதில் மீண்டும் செல்லத்துரை போட்டியிடுகிறார். அதேபோல், சுயேச்சையாக வெற்றி பெற்ற கருவேப்பிலங்குறிச்சி கவுன்சிலர் மலர்கொடி அண்மையில் தி.மு.க., வில் இணைந்தார். இதனால் செல்லதுரை, மலர்கொடி ஆகிய இருவரும் சேர்மன் பதவிக்கு போட்டியிட தயாராகி உள்ளனர்.இந்நிலையில், மலர்கொடிக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்கள் சிலர் தற்போது அவர் மீது அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், செல்லதுரையை சேர்மன் பதவியில் அமர்த்த கவுன்சிலர்கள் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர். சேர்மன் பதவிக்கு 10 ஓட்டுகள் பெற வேண்டும். இதனால் மறைமுக தேர்தலில் வெற்றி பெற்று சேர்மன் பதவியில் அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
வெற்றியைதீர்மானிக்குமா பாம.க.,
முகாசபரூர் அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா பாலதண்டாயுதம் இறந்ததால், அந்த பகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடந்தது. அதில், தி.மு.க., வெற்றி பெற்றது. இதனால், தி.மு.க., கவுன்சிலர்கள் 5 ஆக உயர்ந்தனர். மேலும், சேர்மன் செல்லதுரை தி.மு.க.,வில் இணைந்தார். மேலும், அ.தி.மு.க., கவுன்சிலர் ஒருவரும் தி.மு.க.,வில் இணைந்துள்ளார். இத னால், தி.மு.க.,வின் பலம் 7ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே 5 அ.தி.மு.க., கவுன்சிலர்களில் செல்லதுரை தி.மு.க.,வில் இணைந்தது. அ.தி.மு.க., கவுன்சிலர் மல்லிகா மரணம், மேலும் ஒரு கவுன்சிலர் தி.மு.க.,வில் இணைந்ததால், தற்போது 2 பேர் மட்டுமே அ.தி.மு.க.,வில் உள்ளனர்.மேலும், பா.ம.க., 4, பா.ஜ., 1; தே.மு.தி.க., 1; சுயேச்சைகள் 4 பேர் உள்ளனர். இதில், பா.ம.க., 4 கவுன்சிலர்களின் தயவை முழுவதுமாக பெறுபவர் சேர்மன் பதவியில் அமர வாய்ப்புள்ளது.
இதனிடையே சேர்மன் பதவிக்கு போட்டியிடுவோர் சுயேச்சைகளின் ஆதரவை பெற முனைப்பு காட்டுகின்றனர்.தி.மு.க., கவுன்சிலர்களுக்கிடையே சேர்மன் பதவிக்கான போட்டி நிலவுவதால், தற்போதுள்ள அ.தி.மு.க., கவுன்சிலர்கள் இருவரும் கூட்டத்தில் கலந்துகொண்டு, ஓட்டளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.