கும்மிடிப்பூண்டி:திருமண மண்டப 'லிப்ட் ரோப்' அறுந்த விபத்தில், பள்ளி மாணவர் இறந்த நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த, பெத்திக்குப்பம் சந்திப்பில், 'ஜெ.எப்.என்., பாரடைஸ்' என்ற பெயரில் திருமண மண்டபம் உள்ளது.முன்னாள் அ.தி.மு.க., மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமாரின் மகள் ஜெயப்பிரியா பெயரில், இந்த மண்டபம் உள்ளது. இம்மாதம், 13ம் தேதி, திருமண நிகழ்வின் போது, உணவு ஏற்றி செல்லும் 'லிப்டின் ரோப்' அறுந்து விபத்துக்குள்ளானது.
அப்போது கேட்ரிங் வேலைக்கு வந்திருந்த, காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் பகுதியை சேர்ந்த ஷீத்தல், 17, என்ற பிளஸ் 1 மாணவர், லிப்டில் சென்ற போது, சம்பவ இடத்திலேயே இறந்தார்.இந்த விபத்தில், படுகாயம் அடைந்த, காஞ்சிபுரம் மாவட்டம், கொனேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாபு மகன் விக்னேஷ், 22, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை, விக்னேஷ் உயிரிழந்தார். கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.