கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், கீரப்பாக்கம் ஊராட்சியில், மாதாந்திர சிறப்பு கூட்டம் நடந்தது.
மொத்தமுள்ள ஒன்பது வார்டுகளில் ஐந்து மற்றும் ஆறாவது வார்டு கவுன்சிலர்களை தவிர்த்து மற்றவர்கள் பங்கேற்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் சுந்தரி கூட்டம் நடத்தினார்.கூட்டம் துவங்கியதும், தே.மு.தி.க.,வைச் சேர்ந்த எட்டாவது வார்டு கவுன்சிலர் பன்னீர், ''தலைவருக்கு பதில் அவரின் கணவர் ராஜேந்திரன், அதிகாரமாக செயல்படுகிறார்,'' என்றார்.
மேலும் அவர், ''சில தினங்களுக்கு முன், ஊராட்சி கட்டடத்தில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு, கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்,'' என புகார் கூறினார்.
அப்போது, பன்னீர், தலைவரின் கணவரான ராஜேந்திரன் இடையே வாக்குவாதம் நடந்தது. அங்கிருந்த தனியார் 'டிவி' சேனல் நிருபர், இந்த வாக்குவாதத்தை வீடியோவாக படம் பிடித்தார். அதற்கு ராஜேந்திரன், ''இந்த கூட்டத்தில் உங்களுக்கு என்ன வேலை. அலுவலக அடையாள அட்டையை காட்டுங்கள்,'' என, அவரிடம் வாக்குவாதம் செய்தார்.
சேனல் நிருபர், அடையாள அட்டை காட்டாததால் வாக்குவாதம் முற்றியது.தொடர்ந்து, தனியார் 'டிவி' சேனல் நிருபர், பெண் ஊராட்சி தலைவரின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து படம் பிடித்தது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கூட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது.