திருப்போரூர்:திருப்போரூர் மலைக்கோவிலுக்கு செல்லும் மண் பாதையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பிரசித்த பெற்ற கந்தசுவாமி கோவில், திருப்போரூரில் உள்ளது. இக்கோவிலின் மேற்கு பகுதியில், 100 அடி உயர பிரணவ மலையில், பாலாம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது.அகத்தியர், முருகப் பெருமானிடம் பிரணவத்தின் பொருள் கேட்க, பிரணவமே மலையாக காட்சியளித்தது என்றும், திருமாலும், மகாலட்சுமியும் இக்கோவிலில் வழிபட்டதாகவும் புராணங்கள் கூறுகின்றன.
பழமை வாய்ந்த இக்கோவிலில், தினமும் காலை, மாலையில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. பிரதோஷம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், படி உற்சவம் உள்ளிட்ட விசேஷ நாட்களில், பிற மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், மலைக்கோவிலுக்கு செல்ல மண் பாதை மட்டும் அமைக்கப்பட்டு, முறையான தார் சாலையோ, சிமென்ட் சாலையோ ஏற்படுத்தப்படவில்லை. மலைச்சரிவில் சாலை கரடு, முரடாக பாதை உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் மலை ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர்.எனவே, பக்தர்களின் நலன் கருதி, மலைக்கு செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.