மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில், புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான திட்டம் தீட்டப்பட்டு, அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், பல்வேறு காரணங்களால், இத்திட்டப் பணிகளை நிறைவேற்றுவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, வெளியூர் பேருந்துகள் சென்னைக்குள் வராமல் இருக்க, வண்டலுார் கிளாம்பாக்கம், மாதவரம், திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம் ஆகிய இடங்களில், புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதில், மாதவரம் புறநகர் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக நகர், ஊரமைப்பு துறை கோரிக்கை அடிப்படையில், சுற்றுலா தலமான மாமல்லபுரம், சென்னைக்கு மிக அருகிலுள்ள செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில், புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த சி.எம்.டி.ஏ., ஒப்புக் கொண்டது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்க, டி.டி.சி.பி., சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிட்டு பணிகளை துவக்கியது.நிலம் கையகப்படுத்துதல், ஒப்பந்ததாரர் குளறுபடி போன்ற காரணங்களால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, டி.டி.சி.பி., விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், மாமல்லபுரத்தில், 6.80 ஏக்கர் நிலத்தில், 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சி.எம்.டி.ஏ., முன்வந்தது. இதற்கான கலந்தாலோசகரை இறுதி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, குடைவரை கோவில் தொடர்பான சில புராதன சின்னங்கள் இருப்பதாகவும், பாரம்பரிய நீர் நிலை இருப்பதாலும், இந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க, சுற்றுச்சூழல் துறை ஆட்சேபம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, கடும் இட நெருக்கடிக்கிடையில் இயங்கும் மாமல்லபுரம் பேருந்து நிலையத்திற்கு, இப்புது திட்டத்தால் விடிவு கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது புதிய சிக்கல் எழுந்துள்ளது. பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைவர்கள், சுற்றுலா பயணியரின் வருகையால், மாமல்லபுரம் களைகட்டி வரும் நிலையில், தற்போது சர்வதேச செஸ் போட்டிகளும் நடைபெறவுள்ளதால், இவ்விடம் உலக அரங்கில் தொடர்ந்து முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
இதனால், இப்பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், தொல்லியல் துறை, சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதே போல், சென்னை - திருச்சி வழித்தடத்தில் செங்கல்பட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதற்கான பணிகளை மேற்கொள்ள சி.எம்.டி.ஏ., ஒப்புக்கொண்டது.
இத்திட்டத்துக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரியை ஒட்டிய, 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து வசிப்போரை வெளியேற்றும் பணிகளை, மாவட்ட நிர்வாகம் துவக்கி உள்ளது.ஆனால், இந்த நிலம், வேதாச்சலம் முதலியார் என்பவரால், 60 ஆண்டுகளுக்கு முன், மருத்துவ கல்லுாரி அமைப்பதற்காக தானமாக வழங்கப்பட்டது.இதை, பேருந்து நிலைய திட்டத்துக்கு பயன்படுத்துவதில் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதால், இந்த திட்டமும் கேள்விக்குறியாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில், தற்போதுள்ள பேருந்து நிலையத்தால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையில், புதிய பேருந்து நிலையம் அமைக்க, 10 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்துதல் பணிகளை மாவட்ட நிர்வாகம் துவங்கியுள்ளது.ஆனால், இதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை மாற்ற வேண்டும் என, ஆளுங்கட்சி பிரமுகர்கள் தரப்பில் இருந்து கடும் அழுத்தம் வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இதில் சில பகுதிகள் மேய்க்கால் புறம்போக்கு வகைப்பாட்டில் உள்ளன.இத்தகைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கு ஈடாக, இரண்டு மடங்கு நிலத்தை, சம்பந்தப்பட்ட துறைக்கு வழங்க வேண்டும். இதற்கான நிலம், சி.எம்.டி.ஏ., வசம் இல்லாததால், இத்திட்டத்திற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
புதிய பேருந்து நிலையங்கள் அமைப்பதில் உள்ள சிக்கல் குறித்து, நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: மாமல்லபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய இடங்களில் புதிய நவீன பேருந்து நிலையங்கள் அமைக்க வேண்டியது அவசியம். ஆனால் முதலில், மாவட்ட வருவாய் அதிகாரிகள், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் இணைந்து கள ஆய்வு செய்து, சரியான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.கள ஆய்வின்றி கலந்தாலோசகர் பரிந்துரை அடிப்படையிலும், கட்டுமான பிரிவு பரிந்துரை அடிப்படையிலும் முடிவுகள் எடுக்கப்படுவதே, சிக்கலுக்கு காரணம். இப்போதாவது இந்த விஷயத்தில் கள நிலவரம், சாத்தியக்கூறுகளை அறிய சி.எம்.டி.ஏ., நிர்வாகம் முன்வர வேண்டும். முதல்வர், தலைமை செயலர் உள்ளிட்டோர் தலையிட்டு, நிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். அப்போது தான் புதிய பேருந்து நிலையங்களுக்கான திட்டம் நிறைவேறும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -