திண்டுக்கல், :பத்தாம் வகுப்பு கணித தேர்வில் மாணவர்களை கலங்கடிக்கும் வகையில் பல வினாக்கள் இடம் பெற்றதால் அதிக மதிப்பெண் பெறுவது பெரும் சவாலாக இருக்கும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். 'அதிக கடின வினாக்கள் இடம் பெற்றதை வினாத்தாள் தயாரிப்பு குழு கவனிக்க தவறியுள்ளது' என ஆசிரியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறியதாவது:
கடினம் இல்லாத வினாத்தாள்
என். மஞ்சு, ஆசிரியை, என்.எஸ்.வி.வி., மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, பட்டிவீரன்பட்டி: தேர்வுக்கு தயாராவதற்கு போதிய நேரம் இல்லாத காரணத்தால் கடைசியாக நடத்தப்பட்ட பாடங்களிலிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதில் மாணவர்களுக்கு சிரமம் இருந்தது. 2, 3 மதிப்பெண் வினாக்களில் கட்டாயம் பதிலளிக்க வேண்டிய கேள்விகள் சுற்றி வளைத்து கேட்கப்பட்டு இருந்தது. புத்தக மாதிரி வினாக்கள் போன்று புத்தகத்திற்கு வெளியிலிருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. திருப்புதல் தேர்வுகளில் இருந்து கேள்விகள் இருந்தன. சில வினாக்கள் யோசித்து பதில் அளிக்க வேண்டிய நிலை இருந்ததால் நுாற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பது குறைவாகவே இருக்கும். மொத்தத்தில் வினாத்தாள் கடினம் இல்லாமல் இருந்தது
வரைபடம், வடிவியல் எளிது
எம்.ரஞ்சிதா, அரசு உயர்நிலைப்பள்ளி, பாடியூர் ,வடமதுரை : கட்டாயம் பதிலளிக்க வேண்டிய 2, 5 மதிப்பெண் வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. 5 மதிப்பெண் வினாக்கள் 10ல் 4 கேள்விகள் சிறிது கடினமாக இருந்தன. மற்றபடி வரைபடம், வடிவியல், 1, 2 வினாக்கள் என அனைத்தும் எளிதாக இருந்தன. தேர்ச்சி பெறுவது எளிது. நன்கு படித்தவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக பெறமுடியும்.
தேர்ச்சி பெறுவது எளிது
விஜயராகவன், கே.ஆர்.அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, ஒட்டன்சத்திரம்: கேள்விகள் அனைத்தும் எளிமையாக இருந்தது. சில வினாக்கள் மட்டும் சிந்தித்து விடை அளிக்கும் படி கேட்கப்பட்டிருந்தது. திருப்புதல் தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் அதிகமாக இருந்தது. ஒரு சிலவினாக்களை தவிர்த்து மற்ற அனைத்தும் புக் பேக்கில் இருந்து கேட்கப்பட்டிருந்தது. கிராப் ,வடிவியல் பகுதி எளிமையாக கேட்கப்பட்டது. ஐந்து மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. கட்டாய வினா கடினமாக இருந்தது. திருப்புதல் தேர்வுகளை ஒப்பிடும்போது அதிக மதிப்பெண்கள் பெற முடியும். எளிதாக தேர்ச்சி அடையலாம்.
முழு மதிப்பெண்
பெறுவது கடினம்
பவதாரணி, பத்தாம் வகுப்பு மாணவி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பழநி: கணித தேர்வில் அனைவரும் தேர்வு பெறுவது எளிது. கணிதத்தில் பெரும்பான்மையான கேள்விகள் எளிதாக இருந்தது. ஐந்து மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தது. பெரும்பாலும் புத்தகத்திலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. முழு மதிப்பெண்கள் பெறுவது கடினம்.
100 சத மதிப்பெண்
குறைய வாய்ப்பு
பி.நாகராணி, அரசு உயர்நிலைப்பள்ளி சின்னாளபட்டி : 8 பாடங்களில் குறைக்கப்பட்ட பாடப் பகுதியில் மட்டுமே வினாக்கள் இடம் பெற்றிருந்தது. வடிவியல், வரைபடம், ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதி மிகவும் எளிமையாக இருந்தன. இவற்றின் மூலம் எளிதில் தேர்ச்சி மதிப்பெண்ணை பெறும் வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான வினாக்கள், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட பகுதியில் இருந்தே இடம் பெற்றுள்ளன. 1, 5 மதிப்பெண் வினாக்கள் மிக எளிமையாக இருந்தது. தேற்றம் குறித்த வினாக்கள் அதிகம் முறை பயிற்சி பெற்ற பகுதிகளே வந்திருந்தன. 2 மதிப்பெண் வினாக்களை புரிந்து சொந்த நடையில் பதில் அளிக்கும் வகையில், சராசரி நிலை மாணவர்களுக்கு சற்று கடின தன்மை இருந்திருக்கும். 100 சத மதிப்பெண் என்பது குறைய வாய்ப்புள்ளது.
கற்கண்டாக இருந்தது
கா.சத்தியபாலா, புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்: கணித பாடம் எனக்கு விருப்பமானது என்பதால் கடினமாக தெரியவில்லை. 2 ,8 மதிப்பெண் வினாக்கள் எளிமையாக இருந்தது. 5 மதிப்பெண் வினாக்களில் சில வினாக்கள் கடினமாக இருந்தது. அனைத்து கேள்விகளுக்கு புத்தகத்தில் இருந்தே கேட்கப்பட்டிருந்தது. ஒரு மதிப்பெண் வினாவில் இரு கேள்விகள் மட்டும் பொதுவான வினா இருந்ததால் 100 மதிப்பெண் எடுப்பது சந்தேகம். கணக்கு பாடத்தில் விருப்பம் இல்லாதவர்களுக்கு வினாக்கள் சற்று கடினமாக இருந்தது.