மதுரை, :மதுரை மின்வாரிய, மாநகராட்சி தெரு விளக்கு பராமரிப்பு ஒப்பந்த பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற மறுப்பதால் பல வார்டுகளில் தெரு விளக்குகள் எரியாமல் இருட்டு மிரட்டி கொண்டிருக்கிறது.மின் கம்பங்களை நடுவது, வீடுகளுக்கு இணைப்பு கொடுப்பது, இணைப்பு துண்டிக்கப்படும் போது சரி செய்வது உள்ளிட்ட பணிகளை மின்வாரிய பணியாளர்கள் மேற்கொள்கிறார்கள். மின் கம்பங்களில் தெரு விளக்குகளைபொருத்துதல், பழுதுநீக்குதல் பணிகளை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் செய்கிறார்கள்.ஏற்கனவே தெருக்களில் பொருத்தப்பட்டுள்ள எல்.இ.டி., தெரு விளக்குகளில் வெளிச்சம் குறைவாக உள்ளது.கம்பத்தில் உள்ள சில பல்புகளும் 'பீஸ்' போயுள்ளது. தெரு விளக்கு பிரிவுக்கு புகார் அளித்தால் பழைய விளக்குகளை பொருத்தி செல்வதால் அதுவும் ஒரே நாளில் பல்லை காட்டி விடுகிறது.பழைய, புதிய விளக்குளை மின் வயரில் முறையாக முறுக்கி இணைப்பு கொடுக்க அப்பகுதியில் மின்தடை செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் மின்தடை செய்ய முடியாத காரணத்தால் மின் விளக்கு வயரை சும்மா கொக்கி போட்டு செல்கிறார்கள். காற்று வேகமாக வீசும் போது கொக்கி வயர் கீழே விழுந்து மின் விளக்கு எரியாமல் போகிறது.ஒப்பந்த பணியாளர்கள் மின் விளக்கு பொருத்தும் போது மின்வாரியத்திடம் மின்தடை செய்ய கேட்டால் 'நீ என்ன சொல்றது; நான் என்ன கேட்கிறது. நினைத்த நேரத்தில் தடை செய்ய முடியாது' என்கிறார்களாம். எனவே இரு துறையினரும் ஒருங்கிணைந்து பணியாற்றி மிரட்டும் இருட்டை விரட்ட வேண்டும். தெரு விளக்கு பராமரிப்பையும் மின்வாரியத்திடமே வழங்க வேண்டும்.