அரசியல்வாதிகளின் கல் குவாரிகளுக்கு சிக்கல்; அதிகாரிகள் ஆய்வு துவங்கியது | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
அரசியல்வாதிகளின் கல் குவாரிகளுக்கு சிக்கல்; அதிகாரிகள் ஆய்வு துவங்கியது
Added : மே 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 
Latest district News


திருநெல்வேலி, : திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல் குவாரியில் ஏற்பட்ட பாறைச்சரிவில் 4 பேர் பலியானதை அடுத்து மாவட்டத்திலுள்ள 55 குவாரிகளிலும் அதிகாரிகள் விதிமீறலை கண்டறிய நேற்று ஆய்வை துவக்கினர். அரசியல்வாதிகளின் பெரும்பாலான குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதால் சிக்கல் நிலவுகிறது.தமிழக அரசின் உத்தரவையடுத்து இம்மாவட்டத்திலுள்ள குவாரிகளில் விதிமீறல்களை கண்டறிய கலெக்டர் விஷ்ணு தலைமையில் ஆறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



கனிம வள துணை இயக்குனர்கள் குருசாமி, ரமேஷ், வெடியப்பன், விஜயலட்சுமி, கே.வி.சுமதி, ஜெயந்தி ஆகியோர் இக்குழுக்களில் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் சுகன்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், சேரன்மாதேவி ஆர்.டி.ஓ., சிந்து, மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் மூர்த்தி, ஆர்.டி.ஓ., சந்திரசேகர் இக்குழுக்களுக்கு தலைமை வகிக்கின்றனர்.நேற்று இக்குழுவினர் குவாரிகளில் ஆய்வை துவக்கினர். டோட்டல் ஸ்டேஷன் சர்வே கருவி மூலம் குவாரிகளின் அளவீடுகளை துல்லியமாக கணக்கிட முடியும் என்பதால் சிறிய முறைகேடு என்றாலும் குவாரி உரிமம் ரத்து செய்யப்படும்.ராதாபுரம் வட்டாரத்தில் தி.மு.க., பிரமுகர்கள் நடத்தும் குவாரிகளில் முறைகேடுகள் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன. சில குவாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணு ரூ.20 கோடி அபராதம் விதித்தார். இந்த ஆய்வில் ஒரிரு குவாரிகளை தவிர பெரும்பாலான குவாரிகள் முறைகேடு எதிரொலியாக உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளன.


மே 27 ல் அறிக்கை
கலெக்டர் கூறியதாவது: நேற்று முதல் நாள் 22 கல் குவாரிகளில் ஆய்வு நடந்தது. அனைத்து குவாரிகளிலும் ஆய்வு முடிந்து மே 27 ல் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.


மாநிலம் முழுவதும் குவாரிகளில் இத்தகைய முறைகேடுகள் நடக்கின்றன. எனவே இதுபோன்ற ஆய்வை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும். மேனன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் ட்ரோன் கருவி மூலம் முழுமையான ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது. குவாரிகளில் முறைகேடுகளை ஆய்வு செய்து தடுத்து இயற்கையை பாதுகாப்பதுடன் உயிர்ப்பலிகளை தடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X