பல்லடம்:பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டம் உள்ளதா? அல்லது கைவிடப்பட்டதா என, பல்லடத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தன்னார்வலர் கோரிக்கை மனு மூலம் கேள்வி எழுப்பினார்.பல்லடம் உள் வட்டத்துக்கு உட்பட்ட, பணிக்கம்பட்டி, சித்தம்பலம், வடுகபாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைப்புதுார், கணபதிபாளையம் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று நடந்தது.
டி.ஆர்.ஓ., ஜெய்பீம் தலைமையில் நடந்த இதில், மனுக்கள் வழங்க ஏராளமான பொதுமக்கள் வந்தனர்.அதில், பல்லடம் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை வழங்கிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:பல்லடம் பகுதியில், நாளுக்கு நாள் தொழில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. அதேநேரம், கடுமையான போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.விபத்துகள், உயிரிழப்புகளை தடுக்கும் நோக்கில், பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை தொடர்ந்து, கோவை - திருப்பூர் ரோட்டை இணைக்கும் வகையில் பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக, அரசிடம் ஒப்புதல் பெறப்பட்டு, 45 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை திட்டம் என்ன நிலையில் உள்ளது என்பதே மக்களுக்கு தெரியவில்லை. பல்லடத்தில் பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டம் உள்ளதா? அல்லது கைவிடப்பட்டதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட டி.ஆர்.ஓ., ஜெய்பீம், ''நில எடுப்பு பணிகளை தொடர்ந்து, பைபாஸ் ரோடு அமைப்பதற்கான திட்ட பணிகள் நடந்து வருகின்றன. விரைவில் பணிகள் துவங்கும்,'' என்றார்.இதனால், பல்லடத்தில், பைபாஸ் ரோடு அமைப்பது உறுதியாகி உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.