பல்லடம்:பல்லடம் அருகே செப்டிக் டேங்க் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்ட இருவர், விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர்.பல்லடம் அருகே பாச்சாங்காட்டுப்பாளையத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனது வீட்டு செப்டிக் டேங்க் கழிவு அகற்ற தனியார் கழிவு அகற்றும் வாகனத்தை வரவழைத்தார். கல்லாங்காட்டை சேர்ந்த தண்டபாணி, 60, மற்றும் ஊத்துக்குளி ரோட்டை சேர்ந்த கார்த்திக், 21 ஆகிய இருவரும் இதில், ஈடுபட்டனர்.கழிவுகள் முழுமையாக வெளியேறாததால், கார்த்திக், செப்டிக் டேங்க் உள்ளே இறங்கினார். அப்போது, விஷ வாயு தாக்கி மயக்கமடைந்தார். தொடர்ந்து, கார்த்திக்கை காப்பாற்ற உள்ளே இறங்கிய தண்டபாணியும் உள்ளே மயங்கினார்.பல்லடம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். தண்டபாணி மயக்கம் தெளிந்த நிலையில், கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அலட்சியமே காரணம்
கழிவுகளை அகற்ற நவீன ஏர் செப்டிக் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இருந்தும், கழிவுகள் முழுமையாக வெளியேறாததால், இருவரும் டேங்க் உள்ளே இறங்கியுள்ளனர். அவ்வாறு இறங்கிய இருவரும், பாதுகாப்பு உபகரணங்கள் வாகனத்தில் இருந்தும் அவற்றை அணியவில்லை என்று கூறப்படுகிறது.கட்டுப்பாடுகளை மீறி செப்டிக் டேங்க் உள்ளே இறங்கியதுடன், பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமல் அலட்சியம் காட்டியதே, இருவரும் மயக்கமடைய காரணம். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர், பல்லடம் ரோடு, வித்யாலயம்
அருகிலுள்ள பகுதியில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன், சாயக்கழிவு தொட்டியை சுத்தம் செய்ய இறங்கி, மூவர் பரிதாபமாக பலியாகினர். அதன்பின், உரிய பாதுகாப்பின்றி இப்பணிகளில் ஈடுபடக்கூடாது என மாவட்ட நிர்வாகம் எச்சரித்தது. இருப்பினும், நேற்று பல்லடம் அருகே இருவர் விஷவாயு தாக்கி சிகிச்சை பெறுவது குறிப்பிடத்தக்கது.