பல்லடம்:'தினமலர்' செய்தி எதிரொலியால், காரணம்பேட்டை நால்ரோடு சிக்னல் சீரமைக்கப்பட்டது.பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டை நால் ரோடு, போக்குவரத்து நிறைந்த பகுதியாகும். கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், பொள்ளாச்சி -- மைசூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையும் இணைகிறது. வாகன நெரிசல் மிகுந்த இப்பகுதியில் உள்ள சிக்னல் அடிக்கடி பழுதாகி வருவதால், விபத்து அபாயம் ஏற்பட்டு வருகிறது.
சிக்னல் பழுதாகி நீண்ட நாட்களாக சரி செய்யப்படாமல் இருந்தது. இதனால், தாறுமாறாக சென்ற வாகன ஓட்டிகள் குழப்பம் அடைந்து வந்தனர். இது குறித்து, 14ம் தேதி 'தினமலர்' திருப்பூர் பதிப்பில் செய்தி வெளியானது.இதையறிந்த, அதிகாரிகள் சிக்னல் பழுதை சீரமைத்தனர். மேலும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்த போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து நிறைந்த இப்பகுதியில், விபத்து அபாயம் உள்ளதால், சிக்னலை பழுதாகாத வகையில் அவ்வப்போது ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.