மேட்டுப்பாளையம்:தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.மேட்டுப்பாளையத்தில், தேங்காய் சீசன் காரணமாக வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை குறைந்துள்ளது. எனினும், வழக்கத்துக்கு மாறாக விலை பெரிதும் சரிந்துள்ளதால், விவசாயிகள்கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து, முத்துக்கல்லுார் குறிஞ்சி உழவர் மன்ற செயலாளர் தேவராஜ் கூறியதாவது: தற்போது தேங்காய் வரத்து அதிகளவில் உள்ளது. தற்போது உரித்த ஒரு கிலோ தேங்காய், 19 ரூபாய்க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர்.ஒரு கிலோவுக்கு சராசரியாக மூன்று தேங்காய்கள் நிற்கின்றன. காய் பறித்து, உரிக்க ஒரு தேங்காய்க்கு, இரண்டு ரூபாய், 50 பைசா கூலி கொடுக்கப்படுகிறது.மூன்று தேங்காய்களுக்கு கூலி, ஏழு ரூபாய், 50 பைசா ஆகிறது. 19 ரூபாயில், கூலியை கழித்தால், 11 ரூபாய், 50 பைசா கிடைக்கிறது.
சராசரி ஒரு தேங்காய், நான்கு ரூபாய் விலை கிடைக்கிறது.கடைகளில் ஒரு தேங்காய், 15 லிருந்து, 20 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. மொத்தமாக கிலோ கணக்கில் வாங்கும் பொழுது ஒரு கிலோ, 35 ரூபாய்க்கு விற்கின்றனர். மேலும், 60 பைசாவுக்கு விற்பனையான ஒரு தேங்காய் மட்டை, தற்போது 20 பைசாவுக்கு விற்பனையாகிறது.
எனவே, தமிழக அரசு தேங்காய்களை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.மேலும், சத்துணவு மையங்களில் சமையல் செய்ய தேங்காய் எண்ணையை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்கும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.