அதன்பேரில், முதல்கட்டமாக, 2020-21 நிதி ஆண்டிற்கு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தலா 50 கி.மீ., துாரத்திற்கு சாலை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்புதல் வழங்கியது. மேலும், இப்பணியை செய்து முடித்து அறிக்கை சமர்ப்பித்தால், 2021-22 நிதி ஆண்டில் 200 கி.மீ., துார சாலை அமைக்க ரூ.100 கோடி வழங்குவதாக மத்திய அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில், கடந்த 2020-21 நிதி ஆண்டிற்கு ஒதுக்கீடு பெற்ற நிதியை கொண்டு சாலை அமைக்கும் பணி, தொடர் மழை போன்ற இயற்கை சீற்றங்களாலும், கொரோனா தொற்று பரவல், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தாமதமாகியது.
இதற்கிடையே, தார் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, திட்ட மதிப்பீடு அதிகமானதால், கிராமப்புற சாலை அமைக்க ஒப்பந்ததாரர்கள் யாரும் முன்வர வில்லை. நீண்ட இழுபறிக்கு பின் தற்போது, புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 14 இடங்களில் ரூ.25 கோடி மதிப்பில் 50 கி.மீ., துார கிராமப்புற சாலைகளை புதுப்பிக்கும் பணி ஆங்காங்கே துவங்கி நடந்து வருகிறது.
காரைக்காலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை பணிகள் துவக்கப்படவில்லை.கடந்த 2020-21 நிதி ஆண்டிற்கான வேலையே ஓராண்டிற்கு பிறகு தற்போது நடந்து வருவதால், 2021-22 நிதி ஆண்டிற்கு மத்திய அரசு தருவதாக உறுதியளித்த ரூ.100 கோடியை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, கிராமப்புற சாலைகளை சீரமைக்க மத்திய அரசு அளிக்க தயாராக உள்ள நிதியை பெற்றிட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.