மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாரும் பாதிக்காத வகையில் இருக்கும்: கவர்னர் | புதுச்சேரி செய்திகள் | Dinamalar
மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையாரும் பாதிக்காத வகையில் இருக்கும்: கவர்னர்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி:புதுச்சேரி சிறையை கவர்னர் தமிழிசை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக, சிறை வளாகத்தில் 3 ஏக்கர் நிலத்தை கைதிகளால் சமன்படுத்தி, ஒருங்கிணைந்த பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.இங்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழங்கள், மூலிகைகள், காய்கறிகள் என ஆயிரம் செடிகள், கொடிகள் நடப்பட்டுள்ளன. மேலும், இயற்கை உரம் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது.

இதனையும் கைதிகளே பராமரிக்கின்றனர்.கைதிகள் சாகுபடி செய்த கத்திரிக்காய், மாங்காய், எலுமிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை மற்றும் மஞ்சள் சாமந்தி பூக்கள் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இதனை அறிந்த கவர்னர் தமிழிசை, நேற்று மத்திய சிறை வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பண்ணையை பார்வையிட்டார்.கைதிகளின் மன அழுத்தத்தைப் போக்கவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும், பாரம்பரிய முறையில் இயற்கை உரத்தை பயன்படுத்தி காய்கறிகள், பழங்கள், பயிர் வகைகளை கைதிகள் சாகுபடி செய்து வருவதையும் பாராட்டினார்.கைதிகளிடம், சிறையில் உள்ள வசதிககள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சிறை வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார்.

சிறைத்துறை ஐ.ஜி., ரவிதீப் சிங் சாகர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.பின், கவர்னர் அளித்த பேட்டி:சிறையில் விளைவிக்கப்படும் விளைபொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தையில் இடம் ஒதுக்க வேண்டும் என கேட்டுள்ளனர். உழைக்க தயாராக இருக்கிறோம்; பயிர் செய்ய இன்னும் கூடுதல் நிலம் தாருங்கள் என்றும் கைதிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது கைதிகள் விளைவித்த பொருட்கள் சிறைச்சாலையிலேயே உணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள பொருட்களை உழவர் சந்தையில் விற்பனை செய்ய இடம் ஒதுக்க பரிசீலிக்கப்படும்.தண்டனை காலம் முடிந்த கைதிகளை விடுதலை செய்வது குறித்து மனிதாபிமானம் மற்றும் சட்டரீதியாக அணுகப்படும். இதில் உடனடியாக எதுவும் பதில் சொல்ல முடியாது.

காரைக்கால் கிளை சிறைக்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.அங்கு சிறை கட்டி முடிக்க 2 ஆண்டுகள் ஆகும். அதுவரை அங்குள்ள கைதிகள் புதுச்சேரி சிறையில் பாதுகாப்பாக இருப்பார்கள்.மின்துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளில் அரசு என்ன முடிவு எடுத்தாலும் அது பொதுமக்களுக்கும், ஊழியர்களுக்குமான நல்ல முடிவாகத்தான் இருக்கும். நல்லது நடப்பதற்காகத்தான் எந்த முடிவும் எடுக்கப்படுகிறது. எந்தவிதத்திலும், யாரும் பாதிக்காத அளவுக்குத்தான் அரசின் நடவடிக்கை இருக்கும். எனவே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட வேண்டும், 'என்றார்.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X