திருக்கனுார்:மணலிப்பட்டில் உள்ள அரசு இடத்தை உடனடியாக சர்வே செய்து, சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும் என, அரசுக்கு, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கிராமத்தில் ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் குறைந்த செலவில் தங்களது சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு வசதியாக, சமுதாய நலக்கூடம் அமைத்து தரக் கோரி பலமுறை அரசுக்கு கோரிக்கை மனு அளித்து வருகின்றனர்.
இருந்தபோதும், இதுவரை சமுதாய நலக்கூடம் அமைக்கப்படவில்லை. இதனால், கிராம மக்கள் தங்களது சுபநிகழ்ச்சிகளை, திருக்கனுார் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண நிலையங்களில் நடத்தும் சூழ்நிலை நிலவி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களில் சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டு, அதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், எங்களது கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தால், அதற்கான போதிய இடம் இல்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எங்களது குடியிருப்புக்கு மத்தியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பிலான நிலம் உள்ளது. தற்போது போதிய பராமரிப்பு இல்லாமல், ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை அதிகாரிகள் மூலம் சர்வே செய்து உடனடியாக சமுதாய நலக்கூடம் மற்றும் இளைஞர்களுக்கான விளையாட்டு மைதானம் அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்தனர். இல்லையெனில், பொதுமக்களை ஒன்றுதிரட்டி மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.