15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் குடிநீர் பிரச்னை...தொடர்கிறது:அதிருப்தியில் கண்டாச்சிபுரம் ஊராட்சி மக்கள் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
15 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் குடிநீர் பிரச்னை...தொடர்கிறது:அதிருப்தியில் கண்டாச்சிபுரம் ஊராட்சி மக்கள்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

கண்டாச்சிபுரம்:கண்டாச்சிபுரம் ஊராட்சியில் தொடரும் குடிநீர் தட்டுப்பாட்டைத் தீர்க்க குடிநீர் வடிகால் வாரியமும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கண்டாச்சிபுரம் ஊராட்சியில் நீண்டகாலமாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இங்குள்ள மண்ணின் தன்மை காரணமாக வீடு மற்றும் நிலங்களில் உள்ள கிணற்று நீரும் உப்பு நீராக உள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசு செஞ்சி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ், செஞ்சிக்கு செல்லும் தென்பெண்ணை ஆற்றுக் குடிநீரின் ஒரு பகுதியை கண்டாச்சிபுரத்திற்கும் வழங்கி நடவடிக்கை எடுத்தது.இதனால் இப்பகுதியில் நிலவிய குடிநீர் பஞ்சம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

27 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகை அடிப்படையில் தற்போதும் ஆற்றுக் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக மீண்டும் கண்டாச்சிபுரம் ஊராட்சியில் குடிநீர் பஞ்சம் நிலவி வருகிறது.இதுகுறித்து அப்போதைய ஊராட்சி நிர்வாகத்தினர், ஆட்சியில் இருந்த அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் தீர்வு காணப்படவில்லை.
கண்டாச்சிபுரம் ஊராட்சியிலும், கண்டாச்சிபுரத்தைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் புதிதாக வீடுகட்டி குடியேறியுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் கண்டாச்சிபுரம் ஊராட்சி விரிவடைந்து வருவதுடன், மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.ஆனால், தற்போது 20 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் ஆற்றுக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது.
குறிப்பாக கோடை காலத்தில் குடிநீருக்காக மக்கள் கடும் அவதியடைகின்றனர். கண்டாச்சிபுரம் ஊராட்சிக்கு தண்ணீர் வழங்கும் நீரேற்றம் அமைந்துள்ள ஊராட்சிகளான நெற்குணம், முகையூர் உள்ளிட்ட இடங்களில் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டும், கண்டாச்சிபுரத்தில் உள்ள நீரேற்று நிலைய மின் மோட்டாரை அதிக மின் திறன் கொண்டதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது கண்டாச்சிபுரம், அங்குராயநத்தம், மடவிளாகம், இருளர்பாளையம், இந்திரா நகர் பகுதி மக்கள் தங்களுக்கு தினசரி ஆற்று குடிநீர் வழங்கும்படி அரசியல் கட்சியினரிடம் கோரிக்கை விடுத்தனர். தீர்த்து வைப்பதாக உறுதியளித்தனர்.
தற்போது, உயர் கல்வித் துறை அமைச்சராக உள்ள பொன்முடி குடிநீர் பிரச்னையைத் தீர்ப்பதாக அப்போது வாக்குறுதி கொடுத்தார். தி.மு.க., அரசு அமைந்து ஓராண்டாகியும் கண்டாச்சிபுரத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கியபாடில்லை. இதனால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடந்த காலத்தைப்போல் அல்லாமல் தற்போது கண்டாச்சிபுரம் ஊராட்சிக்கு கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் அடிக்கடி வந்து செல்லும் நிலையிலும் குடிநீர் பஞ்சம் தொடர்கிறது. குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து, அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளன.
எனவே, கண்டாச்சிபுரம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை போர்க்கால அடிப்படையில் தீர்க்க மாவட்ட நிர்வாகமும், குடிநீர் வடிகால் வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக கண்டாச்சிபுரம் ஊராட்சிக்கு தினசரி குடிநீர் வழங்கவும், அதற்கு தேவையான தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X