விழுப்புரம்:விழுப்புரத்தில் இரண்டாம் நிலை பெண் காவலர்களுக்கு கைரேகை எடுப்பது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சீருடை பணியாளர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தகுதியடைந்த 2ம் நிலை காவலர்களுக்கு பயிற்சி பள்ளிகளில் 7 மாதங்கள் சட்டம், ஒழுங்கு பற்றிய அடிப்படை பயிற்சி, கவாத்து, துப்பாக்கி சுடுதல் உள்பட பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் கடலுார் உட்பட பிற மாவட்டங்களைச் சேர்ந்த 2ம் நிலை பெண் காவலர்கள் 480 பேர் பயிற்சி பெறுகின்றனர். இவர்களுக்கு கைரேகை, தடயவியல் குறித்த பயிற்சி விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நடந்தது. இதில், மயிலம் காவலர் பயிற்சி பள்ளி முதல்வர் ஜான்சன், முதன்மை சட்ட போதகர் பாலின், உதவி சட்ட போதகர்கள் ரவீந்திரன், ராஜசேகரன், வாசு ஆகியோர் பங்கேற்று, பெண் காவலர்களுக்கு கைரேகை, தடயவியல் சம்பந்தமான பயிற்சி அளித்தனர்.
கொலை, கொள்ளை உட்பட பல குற்ற சம்பவத்தின் போது, சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று எப்படி கைரேகை எடுப்பது, தடயவியல் சோதனையை எப்படி மேற்கொள்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.