கோவை;நாட்டுக்கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி, 98 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், கணவன், மனைவிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.திருப்பூர், முதலிபாளையத்தை சேர்ந்த மதியழகன்,51, இவரது மனைவி லட்சுமி,40 ஆகியோர், 'அங்காளம்மன் அக்ரோ பார்ம்ஸ்' என்ற பெயரில், 2012 வரை நாட்டுகோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இந்நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வோருக்கு, மாதம் தோறும் 7,000 ரூபாய் வட்டி மற்றும் ஊக்கத் தொகையுடன், கோழி குஞ்சுகள் மற்றும் அவற்றை வளர்க்க செட் அமைத்து தருவதாக விளம்பரப்படுத்தினர்.இதை நம்பி, 81 பேர், 98 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தனர். ஆனால், வட்டியும், டெபாசிட் தொகையும் திருப்பி தராமல் மோசடி செய்தனர். கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணையின் போது, 26 பேருக்கு, 40 லட்சத்தை திருப்பி கொடுத்தனர். மீதி பேருக்கு தராததால், கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் (டான்பிட்) வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மதியழகன், லட்சுமி ஆகியோருக்கு, 10 ஆண்டு சிறை, 44 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். இருவரும் கோர்ட்டில் ஆஜராகததால், 'பிடிவாரன்ட்'பிறப்பிக்கப்பட்டது.அரசு தரப்பில் வக்கீல் கண்ணன் ஆஜரானார்.