சென்னை: தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்கக் கோரி, ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார், ஒருவரை கைது செய்தனர்.
ஆந்திரா முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில் இருந்து, ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி வந்து, அரிசி ஆலைகளுக்கு அனுப்புகின்றனர்.
அங்கு அரிசியை 'பாலிஷ்' செய்து, மீண்டும் கடத்தல் கும்பலுக்கு அனுப்புகின்றனர். அவர்கள் வெளிச்சந்தையில் விற்கின்றனர்; கர்நாடகாவுக்கும் அனுப்புகின்றனர். 'பாலிஷ்' செய்யப்பட்ட ரேஷன் அரிசி கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சித்துார் மாவட்டம் வழியாக, ஆந்திராவுக்கு அரிசியை கடத்தி செல்கின்றனர்.
குறிப்பாக பேர்ணாம்பட்டு, வாணியம்பாடி, திம்மம்பேட்டை, கனக நாச்சியம்மன் கோவில், காந்தி நகர், நாட்ராம்பள்ளி, வேப்பனஹள்ளி போன்ற பகுதிகளின் வழியாக, அரிசி கடத்தி வருகின்றனர்.எனவே, தமிழகம் - ஆந்திரா எல்லையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேணடும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடிதத்துடன், ரேஷன் அரிசி கடத்தி வந்த வாகனம், அதில் வந்த நபர் குறித்த புகைப்படங்களையும் இணைத்திருந்தார்.
இது குறித்து, தமிழக சிவில் சப்ளை சி.ஐ.டி., போலீசார், அதிரடி விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பகர்கூரை சேர்ந்த சுப்பிரமணி, 41, என்பவரை கைது செய்தனர். அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த, 1,200 கிலோ ரேஷன் அரிசியும், கடத்தல் வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன.