சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நாளை சென்னை வருவதை முன்னிட்டு, நேரு உள் விளையாட்டு அரங்கு மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் பணியில், மின் வாரிய பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில், மின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைத்தாலும், மின் சாதன பழுது காரணமாக மின் தடை ஏற்படுகிறது. இந்நிலையில், நாளை மாலை சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்ட்ரல் அருகில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று, மத்திய அரசு நிதியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
இதையடுத்து, விழா நடக்கும் அரங்கம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளில், தடையில்லாமல் மின் வினியோகம் செய்வதை உறுதி செய்யும் பணிகளை, சென்னை வடக்கு மண்டல தலைமை பொறியாளர் தலைமையில், மின் வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.
இதற்காக, உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், களப் பிரிவு ஊழியர்கள் உட்பட, 100க்கும் மேற்பட்டோர், நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு, மின்சாரம் வரும் மின் வழித்தடம், துணைமின் நிலையங்களில் ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சேதமடைந்த சாதனங்களை அகற்றிவிட்டு, புதிய சாதனங்கள் பொருத்தும் பணியும் நடக்கிறது.