தஞ்சாவூர்: 'டீசல் மானியத்தை உயர்த்தி வழங்குவதோடு, உற்பத்தி விலைக்கே தங்களுக்கு வழங்க வேண்டும்' என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்செயலர் தாஜூதீன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தொடர்ந்து டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசு, தற்போது, சிறிதளவு குறைத்துள்ளது.
இது, மீனவர்களுக்கு ஏற்புடையதாக இல்லை. மீனவர்கள் நஷ்டத்துடனேயே தொழில் செய்யும் நிலையில் உள்ளனர்.எனவே, மீனவர்களுக்கு வழங்கும் டீசல் மானியத்தை உயர்த்தி, உற்பத்தி விலைக்கே மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். தமிழக அரசு, உற்பத்தி வரி நீக்கம் செய்து, டீசலை உயர்த்தி வழங்க வேண்டும்.
இறால், மீன், கணவாய் போன்ற கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதியாளர்கள் 'சிண்டிகேட்' அமைத்து, மிகக்குறைந்த விலைக்கு வாங்குவதால், மீனவர்கள் மிகப்பெரிய சிரமத்திற்கு ஆளாகின்றனர்.இதை தடுக்கும் விதமாக, ஏற்றுமதியாளர்கள், மீனவர்கள், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கலந்து பேசி, சரியான விலை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.