மதுரை: 'மதுரை அரசு மருத்துவமனையின் விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவில் உரிய மருத்துவ வழிமுறைகளை பின்பற்றாமல் விசாரணை என்ற பெயரில் போலீசார் அத்துமீறுவதாக போலீஸ் கமிஷனருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் எழுதியுள்ளார்.
இம்மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர்.
இதில் அண்ணா பஸ் ஸ்டாண்ட் மருத்துவமனை விரிவாக்க மையத்தில் விபத்து சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு செயல்படுகிறது. தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான மருத்துவ வழிகாட்டு முறைகளை விசாரணைக்கு வரும் போலீசார் பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து கமிஷனர் செந்தில்குமாருக்கு டீன் ரத்தினவேல் கடிதம் எழுதியுள்ளார். அதில், தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அதற்கென பிரத்யேக காலணிகளை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் மருத்துவமனை ஸ்டேஷனில் உள்ள போலீசார் பலமுறை அறிவுறுத்தல்களை மீறி, மருத்துவ விதிகளை மீறி தீவிர சிகிச்சைப்பிரிவு வளாகத்திற்குள் காலணிகளுடன் நுழைந்து தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மருத்துவக்குழுவினரிடம் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.
அதேபோல் ஆம்புலன்ஸ் நிறுத்தும் இடத்தில் போலீசார் தங்களது டூவீலர்கள், வாகனத்தை நிறுத்துகின்றனர். இதுபோன்று இனியும் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.'மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகளுக்கு இடையூறு இன்றி, மருத்துவ வழிகாட்டுதலை பின்பற்றி விசாரணை நடத்த வேண்டும்' என போலீசாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.