ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் உள்ள பெண்கள் கடலுக்குச் சென்று கடல் பாசி சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்களுடைய குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரா என்ற 45 வயது பெண் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்குள்ள இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு வடமாநிலத்தவர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று(மே 24) காலை வழக்கம்போல் கடல் பாசி சேகரிக்க சென்ற போது சந்திராவை இறால் பண்ணை அருகே அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்தனர். மேலும் உடலை மறைக்கும் நோக்கத்தோடு உடலை தீ வைத்தும் எரித்துள்ளனர்.
கடல் பாசி சேகரிக்க சென்ற சந்திரா நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடல்பகுதியில் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் சந்திராவை தேடியுள்ளனர். அப்போது காட்டுப் பகுதியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த சந்திராவின் உடலை கண்டுபிடித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த சந்திராவின் உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள், இறால் பண்ணையை அடித்து நொறுக்கியதுடன் அதில் பணியாற்றிய ஆறு வடமாநிலத்தவர்கள் தான் சந்திராவை கூட்டுப்பாலியல் செய்திருக்கலாம் என்று சந்தேகப்பட்டு அவர்களை சரமாரியாக தாக்கி, அவர்களின் வாகனங்களையும் தீ வைத்து எரித்தனர். இதனால் அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்த போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில், வட மாநில இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அரசு வேலை, மற்றும் நிவாரணம் வழங்க கோரியும், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில், இறந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் அவர் வசித்த பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பல மணி நேரம் நீடித்தது. சாலைகளில் டயர்களை வைத்து எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. தனுஷ்கோடி செல்லும் சாலையில் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இதனிடையே, சம்பவம் நடந்த இறால் பண்ணைக்கு உரிய அனுமதி வாங்கவில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பண்ணைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.