சிவகங்கை: நுால் விலை உயர்வு காரணமாக செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலைகள் உற்பத்திமுடங்கியுள்ளது. 700 தறிகள் ஓடாததால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் நுால் விலை உயர்வு காரணமாக பல இடங்களில் நெசவாளர்கள்உற்பத்தி முடங்கியுள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பகுதியிலும், இளையான்குடி பெரம்பச்சேரி பகுதியிலும் நெசவாளர்கள் உள்ளனர். நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக 700 தறிகள் ஓடிக்கொண்டிருந்தன.
இந்த தொழிலை நம்பி 1500 குடும்பத்தினர் இருந்தனர். 4.5 கிலோ கொண்ட நுால் கட்டு1455 ரூபாயாக இருந்தது 2500 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக நெசுவாளர்கள் உரிய விலை கிடைக்காது என்பதால் 3 மாதங்களாக தறிகளை ஓட்ட முடியாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரைக்குடி, இளையான்குடிக்கு அடுத்தபடியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியிலும் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராஜிவ்காந்தி கூட்டுறவு நெசவாளர்கள் சங்கதலைவர் பழனியப்பன் தெரிவித்ததாவது: சிவகங்கை மாவட்டம் காரைக்குடிப்பகுதியில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் நெசவாளர்கள் இருந்தனர். தற்போது 700 தறிகள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்தன. அதுவும் நுால் விலை உயர்வு காரணமாக தறி நெசவு தொழில் மூன்று மாதங்களாக முடங்கியுள்ளன. நெசவாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
போதுமான அளவு பஞ்சு உற்பத்தி இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் நுால் விலைநிலையில்லாமல் உயர்ந்து கொண்டே செல்கிறது. எங்களுக்கு அரசு கூட்டுறவுநுாற்பாலைகளான அண்ணா கூட்டுறவு நுாற்பாலை, எட்டயபுரம் பாரதி நுாற்பாலை, அச்சங்குளம் நுாற்பாலைகளில் இருந்து நுால் விநியோகம் செய்யப்பட்டன. அது தரமற்றதாக இருப்பதால், வெளி மார்க்கெட்களில் நுால் வாங்கி நெசவு செய்து வந்தனர்.
தற்போது நுால் விலை உயர்வு காரணமாக செட்டிநாடு காட்டன் கண்டாங்கி சேலை உற்பத்தி முற்றிலுமாக முடங்கியுள்ளது. அரசு பஞ்சு ஏற்றுமதியை தடை செய்து நுால் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நெசவு தொழிலை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன் வர வேண்டும், என்றார்.