வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில், பள்ளி மாணவர், கல்லுாரி மாணவர் உயிரிழந்தனர்.
வாழப்பாடி, எழில் நகரை சேர்ந்த, செல்வ
முருகன் மகன் மதன்ராஜ், 17. இவரது நண்பர்களான, மேட்டுப்பட்டி தாதனுாரை சேர்ந்த ராஜ்குமார் மகன் சுகுமார், 17, பேளூரை சேர்ந்த முகமது மன்சூர் மகன் அஸ்லாம், 17. இவர்கள் மூன்று பேரும், வாழப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்து, தற்போது தேர்வு எழுதி உள்ளனர்.
இவர்கள், நேற்று முன்தினம் மதியம், 1:20 மணிக்கு, அம்மாபேட்டையில் உள்ள வணிக வளாகதத்தில் பொருட்கள் வாங்கிக்கொண்டு, 'பல்சர்' பைக்கில் புறப்பட்டனர். மதன்ராஜ் ஓட்டினார்.
பொன்னம்மாபேட்டை ரயில்வே குடியிருப்பு அருகே சென்றபோது, திருப்பத்துாரில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. அதில் சுகுமார் சம்பவ இடத்தில் பலியானார். காயம் அடைந்த மற்ற இருவரும், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதேபோல், சேலம், அம்மாபேட்டை, வையாபுரி உடையார் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் ஜெய்ஸ்வா, 21. சென்னையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு படித்தபடி, தனியார் நிறுவனத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, மது அருந்திவிட்டு, 'டோமினார்' பைக்கில் சன்னியாசிகுண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது சாலை தடுப்பில் மோதி சம்பவ இடத்தில் பலியானார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.