அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி
அரூர்: அரூர் அடுத்த கூக்கடப்பட்டியில், கிராம மக்கள் அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடத்தினர். தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. அதேபோல், எட்டிப்பட்டி அழகிரி நகரில், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நிகழ்ச்சி நடந்தது.
நகை வழிப்பறி செய்தவர் கைது
ஓசூர்: ஓசூர் கே.சி.சி., நகரை சேர்ந்த வீரராகவன் மனைவி கற்பகம், 54. இவர் கடந்த, 9ல் மாலை, 6:45 மணிக்கு, கடைக்கு செல்ல நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து வந்த நபர், அனுமந்த் நகர் பாலம் அருகே, கற்பகம் கழுத்தில் கிடந்த, ஒரு பவுன் தங்க நகையை பறித்து கொண்டு தப்பினார். ஹட்கோ போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சிகளை வைத்து, தேன்கனிக்கோட்டை அடுத்த பென்னங்கூரை சேர்ந்த தன்வீர், 32, என்பவரை கைது செய்தனர்.
பிளஸ் 1 மாணவி மாயம்
அரூர்: அரூரை சேர்ந்த, 17 வயது பிளஸ் 1 மாணவி, கடந்த, 21ல் காலை, 8:30 மணிக்கு வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. மாணவியின் தாய் புகார்படி, அரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
சாலை அமைக்க பூமிபூஜை
ஓசூர்: ஓசூர் ஒன்றியம், மாசிநாயக்கனப்பள்ளி பஞ்., ஏ.டி.,முதுகானப்பள்ளியில் சாலை அமைக்க, கனிமங்கள் மற்றும் குவாரிகள் திட்டத்தில், 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஓசூர், தி.மு.க.,-எம்.எல்.ஏ., பிரகாஷ், சிமென்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை, பூமிபூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, கவுன்சிலர்
சம்பத்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
காயமடைந்தவர்களுக்கு ஆறுதல்
ஓசூர்: ஓசூரில் கடந்த, 22ல் நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, மத்துார் ஒன்றியத்தில் இருந்து, 15 பேர் டிராவல்ஸ் வேனில் வந்திருந்தனர். பின் ஊர் திரும்பும்போது, ஓசூர் சீத்தாராம் மேடு ரிங்ரோட்டில், வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மூன்று வயது பெண் குழந்தை உட்பட, 16 பேர் காயமடைந்தனர். அவர்களை, தி.மு.க.,-
எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். நேற்று முன்தினம் இரவு, கிருஷ்ணகிரி காங்.,-எம்.பி., செல்லக்குமார், காய
மடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
சிமென்ட் சாலை சீரமைக்க கோரிக்கை
அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து, அம்பேத்கர் நகருக்கு செல்லும் சிமென்ட் சாலை ஆங்காங்கே உடைந்து, பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. சேதமான சிமென்ட் சாலையை சீரமைக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாழ்வான மின்கம்பிகளால் அவதி
ஓசூர்: சூளகிரி அடுத்த வேம்பள்ளியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது விவசாய நிலம் வழியாக, மிகவும் தாழ்வாக மின்கம்பிகள் செல்கின்றன. மின்வாரியத்தில் பலமுறை புகார் செய்தும், நடவடிக்கையில்லை. அதனால், டிராக்டர் மூலம் உழவு பணியை கூட மேற்கொள்ள முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர். விவசாயத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பியை, உயரமாக அமைக்க வேண்டும், அல்லது மாற்று வழியில் கொண்டு செல்ல, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுடுகாடு கேட்டு சாலை மறியல்
பாலக்கோடு: பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானுாரிலுள்ள அருந்ததியர் காலனியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களுக்கு தனியாக சுடுகாடு இல்லாததால் இறந்தவர்களை வீட்டின் அருகிலேயே புதைத்து வந்தனர். நேற்று முன்தினம் சென்னப்பன், 52, என்பவர் உடல் நலக்குறைவால் இறந்தார், அவரது உடலை அடக்கம் செய்ய இடமின்றி அப்பகுதி மக்கள், தனி சுடுகாடு கேட்டு, நேற்று காலை பஞ்சப்பள்ளி - மாரண்டஹள்ளி சாலையில் பெரியானுார் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த பாலக்கோடு தாசில்தார் ராஜசேகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதனால், மக்கள் மறியலை கைவிட்டனர். பிறகு இறந்த சென்னப்பன் உடலை காலனியிலியே அடக்கம் செய்தனர்.
தொழிலாளி விபரீத முடிவு
ஓசூர்: ஓசூர் அடுத்த பூதிநத்தத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ், 37; மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அவர், கடந்த, 17ல் காலை விஷம் குடித்தார். அவரை, கிருஷ்ணகிரி அரசு மருத்துவ
மனையில் அனுமதித்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். பாகலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
லாரி மோதி தொழிலாளி பலி
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சந்துாரை சேர்ந்தவர் சிவா, 30. டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, உடன் பணியாற்றும் பில்லாகொட்டாயை சேர்ந்த முனியப்பன், 28, தர்மபுரி மாவட்டம், கரகதஹள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ், 29, ஆகியோருடன், ஹோண்டா ஆக்சஸ் மொபட்டில் அறைக்கு திரும்பினர். சிவா மொபட்டை ஓட்டினார். ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது இரவு, 11:30 மணிக்கு சென்றபோது, அவ்வழியாக வந்த லாரியும், மொபட்டும் மோதின. இதில், சிவா சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாய
மடைந்த முனியப்பன், கோவிந்தராஜ், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.
'நெஞ்சுக்கு நீதி'க்கு இலவச டிக்கெட்
அரூர்: அரூரிலுள்ள தியேட்டரில், தி.மு.க., இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி நடித்த, நெஞ்சுக்கு நீதி திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று, அரூர் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சந்திரமோகன், 50 பேருக்கு இலவச டிக்கெட்களை வழங்கினார். இதில், தி.மு.க., நிர்வாகிகள் தமிழழகன், ரஜினி மாறன் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.