செய்திகள் சில வரிகளில் நாமக்கல் | நாமக்கல் செய்திகள் | Dinamalar
செய்திகள் சில வரிகளில் நாமக்கல்
Added : மே 25, 2022 | |
Advertisement
 

நகர்நல மையம் பணிகள் தீவிரம்
குமாரபாளையம், மே 25-
குமாரபாளையம் நகராட்சி பகுதியில் நகர்நல மையம் அமைக்க, நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தானாவால், பழைய காவேரிபாலம் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. இந்நிலையில் நகர்நலம் அமைக்க, நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் பூமிபூஜை போட்டு, கட்டுமானப் பணிகளை துவக்கி வைத்தார். இந்த பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

டூவீலர் மீது லாரி மோதி
தொழிலாளி படுகாயம்
குமாரபாளையம், மே 25-
-குமாரபாளையம் அருகே ஆனங்கூர் ரோடு பழைய தபால் அலுவலகம் அருகே வசிப்பவர் சுரேஷ், 30. கட்டட தொழிலாளி. இவர் தனது டி.வி.எஸ்., 50, டூவீலரில், ஒட்டன்கோவில் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் சுரேஷ் பலத்த காயமடைந்து, குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து, குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர், திருச்சியைச் சேர்ந்த சுரேஷ், 45, என்பவரை கைது செய்தனர்.

காளியம்மன் கோவில்
கும்பாபிஷேகம் விழா
சேந்தமங்கலம், மே 25-
சேந்தமங்கலம் அடுத்த வாழவந்திகோம்பை பஞ்., பூச்சனாங்குட்டையில் பிரசித்தி பெற்ற காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை புதுப்பிக்கும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்தது. கோவிலின் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, வரும், 26ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதற்காக, இன்று மோகனுார் ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து, காந்திபுரம் மாசிமலையான் கோவிலில் இருந்து புறப்பட்டு, பூச்சனாங்குட்டை காளியம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து செல்ல உள்ளனர். பின் காளியம்மனுக்கு திருமஞ்சனம், மஞ்சள், பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்து, தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், விவசாயிகள், பொதுமக்கள் செய்துள்ளனர்.

பஸ் டிரைவரை தாக்கியவர் கைது
குமாரபாளையம், மே 25-
ஈரோடு மாவட்டம், பாசூர் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன், 51. அரசு பஸ் டிரைவர். நேற்று முன்தினம் இரவு, 9:15 மணியளவில், கே. 2 என்ற அரசு பஸ், குமாரபாளையத்திலிருந்து, பள்ளிபாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
குப்பாண்டபாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஸ்கூட்டியில் வந்தவர், பஸ்ஸை நிறுத்தி, பஸ் உள்ளே சென்று, டிரைவர் விஸ்வநாதனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். இதில் டிரைவர் காயமடைந்தார். இதுகுறித்து விஸ்வநாதன் குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, டிரைவரை தாக்கிய, குமாரபாளையம் அம்மன் நகரைச் சேர்ந்த கார் டிரைவர் சுந்தரம், 53, என்பதும், சுந்தரத்தின் உறவுக்கார பெண், கூட்டமாக இருந்ததால், பஸ்ஸில் ஏற முடியவில்லை என்பதால், சுந்தரம் இவ்வாறு நடந்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.
புதிய அலுவலகம் அதிகாரிகள் ஆய்வு
சேந்தமங்கலம், மே 25-
பொம்மசமுத்திரம் பஞ்., அலுவலக கட்டடம் பழுதடைந்துள்ளதால் அதன் அருகே, 23.50 லட்சம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய கட்டடம் கட்ட பணிகள் நடக்கிறது. பஞ்., அலுவலகத்திற்கான புதிய கட்டிடத்தின் கட்டுமான பணிகளை, ஏ.பி.டி.ஓ., பாஸ்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின் போது பஞ்., தலைவர் மலர்கொடி, செந்தில்குமார், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

புதன்சந்தை மாட்டு சந்தையில்
ரூ. 2.75 கோடிக்கு விற்பனை
சேந்தமங்கலம், மே 25-
புதன்சந்தை மாட்டு சந்தையில், 2.75 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானது.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த புதன்சந்தையில், நேற்று மாட்டுச்சந்தை நடந்தது. அதிகாலை, 5 மணிக்கு தொடங்கி, மாலை, 3 மணி வரை நடந்த சந்தைக்கு, அனைத்து வகை மாடுகளையும் வாங்க, விற்கவும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோயம்புத்துார், சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர்.
இதில் பசு, எருமை, கன்றுக்குட்டி என மாடுகள், மொத்தம், 2.75 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையானது. சந்தையில், இறைச்சி மாடுகள், 20 ஆயிரம் ரூபாய், கன்றுக்குட்டிகள், 10 ஆயிரம் ரூபாய், எருமை மாடுகள், 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த வாரம் மாடுகளின் விலை குறைந்ததால், விற்க வந்த விவசாயிகள், வியாபாரிகள் வருத்தம் அடைந்தனர்.

வாகனம் மோதிய விபத்தில்
டெலிபோன் பில்லர் சேதம்
நாமக்கல், மே 25-
நாமக்கல்லில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி டெலிபோன் பில்லர் உடைந்து விழுந்தது.
நாமக்கல்-பரமத்தி சாலை, அரசு மகளிர் மேல்நிலைப்பளளி சுற்றுச்சுவர் பகுதியில் பி.எஸ்.என்.எல்., டெலிபோன் பில்லர் அமைக்கப்பட்டு, பல்வேறு நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் வங்கி ஏ.டி.எம்.,களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அந்த பில்லர் போக்குவரத்துக்கு இடையூறாக பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இந்நிலையில் அந்த டெலிபோன் பில்லரை அடையாளம் தெரியாத வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. அதில் இருக்கும் டெலிபோன் இணைப்பு வயர்கள் வெளியில் தெரியும்படியும், திருடிச்செல்லும் வகையிலும் உள்ளன. எனவே, உடைந்து விழுந்துள்ள அந்த டெலிபோன் பில்லரை சீரமைக்க பி.எஸ்.என்.எல்., நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், அதை சுற்றுச்சுவரின் அருகாமையில் நிறுவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
மழையால் ஒருமணி நேரம் மின்தடை
பள்ளிபாளையம், மே 25-
பள்ளிபாளையம் சுற்றுவட்டாரத்தில் நேற்று இரவு, 6:45 மணிக்கு மழை பெய்தது. அரைமணி நேரம் விடாமல் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. மழை நின்ற பின், காவிரி, காந்திபுரம் பகுதி, வசந்தநகர் உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில், 7:00 மணி முதல், 8:00 மின்தடை வரை ஏற்பட்டது.
விசைத்தறி கூடங்களுக்கு
வரி உயர்வு வேண்டாம்!
திருச்செங்கோடு, மே 25-
திருச்செங்கோடு சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், விசைத்தறி கூடங்களுக்கு, 100 சதவீத வரிஉயர்வை நகராட்சி ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சிறு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர், நகராட்சி சேர்மன் நளினி மற்றும் கமிஷனரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
திருச்செங்கோடு வட்டாரத்தில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
இந்த தொழிலில், 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. கடந்த, 2 ஆண்டாக கொரோனா காலத்தில், தொழில் முடங்கி கிடந்தது. தற்போது நுால் விலை ஏற்றம் காரண மாக, தொழில் நலிவடைந்துள்ளது. ஆகவே, விசைத்தறி கூடங்களுக்கு, 100 சதவீத வரி உயர்வை, தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேற்றில் சிக்கி
மாணவன் பலி
நாமகிரிப்பேட்டை, மே 25-
நாமகிரிப்பேட்டை அருகே நாரைக்கிணறு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் யாதேஷ், 14. இவர் ராசிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று நண்பர்களுடன்
பெரியகிணறு என்ற இடத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது கிணற்றில் இருந்த சேற்றில் சிக்கிய யாதேஷ், மூச்சுத்திணறி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ஆயில்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X