ஈரோடு மாவட்டத்தில் வருவாய் தீர்வாயம் எனப்படும், ஜமாபந்தி நேற்று தொடங்கியது.
ஈரோடு மாவட்டத்தில் ஜமாபந்தி முகாம், நேற்று தொடங்கியது. மாவட்டத்தில் உள்ள, ௧௦ தாலுக்காக்களிலும் வரும், 31ம் தேதி நடக்கிறது. தாளவாடி தாசில்தார் அலுவலகத்தில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஜமாபந்தி பணியை மேற்கொண்டு, வருவாய் கணக்கு ஆவணங்களுக்கு ஒப்புதல் வழங்கினார். முகாமில், 14 பயனாளிகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா, 41 பயனாளிகளுக்கு, நத்தம் பட்டா மாறுதல் ஆணை வழங்கினார்.
* ஈரோட்டில் தாசில்தார் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், ஆர்.டி.ஓ., பிரேமலதா ஜமாபந்தி பணிகளை மேற்கொண்டார். பட்டா மாறுதல், நில அளவீடு உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, 20க்கும் மேற்பட்ட மனுக்களை மக்கள் வழங்கினர்.
* கோபி தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில், 128 மனுக்களும், நம்பியூர் தாலுகாவில், 143 மனுக்களும் பெறப்பட்டன.
* கொடுமுடி தாலுகாவில், 1431-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம், தாசில்தார் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டரிடன் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) ராஜகுமார், மனுக்களை பெற்றார். மொத்தம், 87 மனுக்கள் பெறப்பட்டன. கொடுமுடி தாசில்தார் ஸ்ரீதர், துணை தாசில்தார்கள் பரமசிவம், மரியஜோசப் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* சத்தியமங்கலம் தாலுகாவில் உதவி ஆணையாளர் (கலால்) ஜெயராணி, மக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம், இலவச வீட்டுமனை, நில அளவை செய்தல் உள்பட, 104 பேர் மனு கொடுத்தனர். மனுக்கள் மீது, 10 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சத்தி தாசில்தார் ரவிசங்கர் தெரிவித்தார்.
மின்னணு சேவை பாதிப்பு
அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், அம்மாபேட்டை உள்வட்டத்துக்கு ஜமாபந்தி முகாம் தொடங்கியது. பல்வேறு கோரிக்கை தொடர்பாக, மக்கள் மனுக்கள் வழங்கினர். ஆனால், மின்னணு சேவை இல்லாததால், மனுக்கள் மீது தீர்வு காண்பதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து அந்தியூர் தாசில்தார் விஜயகுமார் கூறும்போது, ''சர்வர் பராமரிப்பு பணி நடப்பதாக தெரிகிறது. இதனால் இரவில்தான் சரியாகும்,'' என்றார்.