புன்செய்புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளில், இரண்டாவது முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அதிகாரிகளின் மெத்தனமே இதற்கு காரணம் என்று, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புன்செய்புளியம்பட்டி நகராட்சி அலுவலக வளாகத்தில், நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகள் உள்ளன. ஒப்பந்த அடிப்படையில் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதில் தர்மலிங்கம் என்பவர் குமரன் ஜூவல்லரி நடத்தி வருகிறார். கடந்த, 20ம் தேதி இரவு இவரது நகைகடை பின்புறம் நகராட்சி அலுவலக வளாக சுவரில், ஒரு அடிக்கு ஒரு அடி துளையிடப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த மற்ற கடைக் காரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புன்செய்புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சத்தி டி.எஸ்.பி., ஜெயபாலன் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
நகை கடையில் கொள்ளையடிக்க வந்த மர்ம ஆசாமிகள், சுவரில் துளையிட்டுள்ளனர். மக்கள் வரும் சத்தம் கேட்டதால் தப்பி ஓடி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கனவே, 2021 ஜன.,ல் நகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்ட, ஸ்டார் ஜூவல்லரி நகை கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்தது. இதில் இன்னும் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியவில்லை. தற்போது இரண்டாவது கொள்ளை முயற்சி நடந்துள்ளது.
இதனால் கடைக்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகராட்சி அதிகாரிகளின் மெத்தனமே இதற்கு காரணம் என்றும், கடைக்காரர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
'போதிய பாதுகாப்பில்லை'
நகை கடையின் சுவரை துளையிட்டு கொள்ளையடிக்க வந்தவர்கள், பாதுகாப்பில்லாத நகராட்சி அலுவலக வளாகத்துக்குள் நுழைந்து, இரவில் துளை போட்டுள்ளனர்.
நகராட்சி அலுவலக வளாகம், போதிய பாதுகாப்பில் இல்லாததையே, கொள்ளை முயற்சி சம்பவங்கள் காட்டுகின்றன. அடுத்து கொள்ளை நடக்கும் முன், பாதுகாப்பை பலப்படுத்த, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, கடைக்காரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.