ஈரோடு மாவட்டத்தில் கர்ப் பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் இருப்பதற்காக, 2,௦௦௦ ரூபாய் மதிப்பிலான சத்துணவு பெட்டகம் வழங்கப்படுகிறது. இதில், ஒரு கிலோ ஊட்டச்சத்து மாவு, 200 மில்லி லிட்டர் இரும்பு சத்து திரவம் கொண்ட மூன்று பாக்ஸ், ஒரு கிலோ உலர் பேரிச்சம் பழம், 500 கிராம் புரதச்சத்து பிஸ்கெட், 500 கிராம் நெய், மாத்திரைகள், துண்டு இருக்கும். கர்ப்பம் தரித்த, மூன்று மாதத்திலும், ஏழு மாதத்திலும் என இருமுறை வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சத்துணவு பெட்டகம் வழங்கப்படவில்லை. குறைவான எண்ணிக்கையில் அனுப்பி வைக்கப்படுவதால், அனைத்து கர்ப்பிணிகளுக்கும் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறும்போது, 'தற்போது தட்டுப்பாடு உள்ளதால், உரிய காலத்தில் இப்பெட்டகம் வழங்க முடியவில்லை. குறைந்த எண்ணிக்கையில் வருவதால், சிலருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. சில கர்ப்பிணிகள் செவிலியர் களிடம் கேட்பதால், பெட்டகம் வந்ததும் தருவதாக கூறி வருகிறோம்' என்றனர்.
மாநகர நல அதிகாரி பிரகாஷ் கூறியதாவது: கடந்த டிச., - ஜன., மாதம் பெட்டகத்துக்கு தட்டுப்பாடு இருந்தது. அதன்பின் சீராகி வருகிறது. இருப்பு நிலவரத்துக்கு ஏற்ப கர்ப்பிணிகளுக்கு பெட்டகம் வழங்குகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.