மாநகராட்சியில் சொத்து வரி, காலியிட வரி உயர்வு தீர்மானம், தி.மு.க., - காங்., கவுன்சிலர்களால், ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு மாநகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமையில், துணை மேயர் செல்வராஜ், கமிஷனர் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சியில் சொத்து வரி குடியிருப்பு கட்டடங்களுக்கு, 600 சதுர அடிக்குள், 1.25 சதவீதம், 1,200 ச.அடிக்குள் இருந்தால், 1.5 சதவீதம், 1,800 ச.அடிக்குள் இருந்தால், 1.75 சதவீதம், 1,800 ச.அடிக்கு மேல் இருந்தால், 2 சதவீதம், குடியிருப்பு அல்லாத கட்டடங்களான தொழிற் சாலைகளுக்கு, 1.75 சதவீதம், வணிக கட்டடங்களுக்கு, 2 சதவீதம், தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு, 1.75 சதவீதமும் உயர்த்தப்பட உள்ளது. மாநகராட்சி அதனுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளை ஒருங்கிணைத்து, காலியிட வரி உயர்வு பொதுசீராய்வு செய்யப்பட உள்ளது. அதன்படி மண்டலம் ஏ, பி, சி என மூன்று பிரிவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஏ மண்டலத்துக்கு காலியிட வரி, 60 பைசாவில் இருந்து, 1.20 ரூபாய்; பி மண்டலத்துக்கு, 50 காசுகளில் இருந்து ஒரு ரூபாய்; சி மண்டலத்துக்கு, 40 காசுகளில் இருந்து, 80 காசாக வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மக்கள், சமூக நல அமைப்புகள் தெரிவித்த ஆட்சேபங்கள் நிராகரிக்கப்பட்டன. வரி உயர்வுக்கு தி.மு.க., மற்றும் காங்., கவுன்சிலர்கள் ஆதரவு தெரிவிக்க, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஐந்து பேர் வெளிநடப்பு செய்தனர். ஒரு பெண் கவுன்சிலர் கூட்டத்துக்கு வரவில்லை.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: வ.உ.சி., மைதானத்தில் செயல்படும் தற்காலிக மார்க்கெட்டில் தார்ச்சாலை அமைக்க வேண்டும். ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட அதிகாரிகளை, கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும். ஈரோடு ஆத்மாவில் இறப்பினை உறுதி செய்ய பல்வேறு சான்றிதழ் கேட்கின்றனர். அதற்கு ஆத்மாவில், மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், ஒரு டாக்டரை நியமிக்க வேண்டும். பாதாள சாக்கடை அடைப்பை சரி செய்ய போதிய வாகனங்கள் இல்லாததால் பணி தாமதமாகிறது. கூடுதல் வாகனங்களை கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். கூட்டம், 4:௦௦ மணிக்கு துவங்குவதாக அறிவித்தனர். ஆனால், 4:55க்கு தான் துவங்கியது. 5:35 மணிக்கு முடிவுக்கு வந்தது.