வெள்ளகோவில் அருகே, முன் சக்கரம் கழன்றதில் தாறுமாறாக சென்ற ஆட்டோ, இரு மொபட்டுகள் மீது மோதியதில், இரு பெண்கள் இறந்து விட்டனர்.
வெள்ளகோவில் அருகே புள்ளசெல்லி
பாளையத்தை சேர்ந்தவர் மோகன், 55; எக்ஸ்.எல்., சூப்பர் மொபட்டில் குறுக்குபாளையத்துக்கு நேற்று முன்தினம் சென்றார். அதே சாலையில் புதுப்பை, கஸ்துாரிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் வளர்மதி, 45; புதுப்பை ரேஷன் கடை ஊழியர் லதா, 51, ஆகியோர், ஹீரோ பிளஸ்ஷர் மொபட்டில் வெள்ளகோவில் நோக்கி சென்றனர்.
வெள்ளகோவில்-மூலனுார் சாலை நாச்சிபாளையம் அருகே, ௬:௩௦ மணியளவில் இரு மொபட்டும் சென்றபோது, எதிரே வந்த ஒரு பயணிகள்
ஆட்டோவின் முன் சக்கரம் கழன்று தாறுமாறாக வந்தது. இரு மொபட்டுகள் மீதும் மோத, மூவரும் துாக்கி வீசப்பட்டனர்.
இதில் மோகனுக்கு இரு கால்களிலும் பலத்த அடிபட்டது. லதா, வளர்மதிக்கு தலை மற்றும் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவர் பெரியசாமி, 39; அதில் பயணித்த திருப்பூர், செவந்தாம்
பாளையம் பெரியசாமி, 39; அவரின் மனைவி சித்ரா, 31, ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் ஆறு பேரையும் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் லதா வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது.
மற்ற ஐந்து பேரும் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கிருந்து கோவை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட வளர்மதி, நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.